Advertisment

FIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி?

FIFA 2018 பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் குரோஷியா ரசிகர்களின் உள்ளங்களை வென்றது. பெரிதாக தவறுகள் செய்யாமலேயே அந்த அணி வீழ்ந்தது பரிதாபம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA, FIFA 2018, ஃபிபா, ஃபிபா உலகக் கோப்பை 2018

FIFA, FIFA 2018, ஃபிபா, ஃபிபா உலகக் கோப்பை 2018

ஆசைதம்பி

Advertisment

FIFA 2018 சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் வென்றது. தவறே செய்யாத குரோஷியா இறுதிப் போட்டியில் வீழ்ந்தது எப்படி? என்பதுதான் புருவம் உயர்த்த வைக்கும் கேள்வி!

FIFA 2018: பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் அணி 4 -2 -3 -1 எனும் ஃபார்மேஷனில் களமிறங்கியது. குரோஷியா அணியும் 4 -2 -3 - 1 எனும் ஃபார்மேஷனில் களமிறங்கியது.

பொதுவாக, குரோஷியா அணி இரண்டாம் பாதியில் தான் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும். ஆனால், நேற்றைய இறுதிப் போட்டியில், குரோஷியா ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அட்டாக்கிங்கில் ஈடுபட்டது. இதனால், பிரான்ஸ் வீரர்கள் தங்கள் டிபன்சை வலுப்படுத்தினர்.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு முதல் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது மிஸ் ஆனது. குரோஷியாவின் ஸ்ட்ரீனிச் வழக்கத்தைவிட நன்றாக மேலே ஏறி வந்து ஆடினார்.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச், பந்தை சிறப்பாக கடத்திச் சென்று பாஸ் செய்தார். கோல் அடித்துவிடுமோ என்று அனைவரும் நினைக்க, பிரான்ஸின் உம்டிடி அதனை சிறப்பாக டிபன்ஸ் செய்தார்.

ஆட்டத்தின், 16வது நிமிடத்தில் பிரான்ஸின் கிரீஸ் மேனை, குரோஷியாவின் ப்ரோசோவிச் தள்ளிவிட்டார். இதில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. இதனை, கிரீஸ்மேன் அற்புதமான கோலாக மாற்ற, அரங்கம் அதிர்ந்தது. இறுதிப் போட்டியில் இவ்வளவு சீக்கிரம் கோல் விழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, பிரான்ஸ் தங்களது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எங்கோலோ கான்ட்டேவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால், குரோஷியாவிற்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

இதை சிறப்பாக பயன்படுத்திய குரோஷியா வீரர் பெரிசிச், ஆட்டத்தின் 27 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால், ஆட்டம் 1-1 என சமனானது. இந்த கோலின் போது குரோஷியா வீரர்கள் ரெபிச், ஸ்ட்ரீனிச், ரகிடிச் ஆக்யிரை ஆப் சைடில் நிற்கவைத்து, பிரான்ஸுக்கு போக்கு காட்டி வலது பக்கமாக பெரிசிச் கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியின் சிறப்பம்சம் என்னவெனில், இரு அணி வீரர்களும், தனிப்பட்ட முறையில் கோல் அடிக்க வேண்டும் என்று நினைக்காமல், அணியின் வெற்றிக்கே முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வந்தனர். இரு அணிகளும் ஒருசேர தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர்.

ஆட்டத்தின் 34 நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச் கையில் பந்து பட்டது. இதனை சரியாக கவனித்த பிரான்ஸ் வீரர் ஜிரவுட் நடுவரிடம் அப்பீல் செய்தார். நடுவர் VAR தொழில் நுட்பக் குழுவின் உதவியை நாடினார். இதனை நன்கு ஆராய்ந்த இத்தாலியைச் சேர்ந்த VAR குழு, பந்து கையில் பட்டது என உறுதி செய்தது. இதனால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அற்புதமாக பயன்படுத்திய கிரீஸ்மேன், ஆப் சைடில் பந்தை உதைக்க, குரோஷியா கோல் கீப்பர் வலது பக்கம் டைவ் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் கிரீஸ் மேனன் விளையாடிய 7 போட்டிகளில் இது நான்காவது கோலாகும்.

அதுமட்டுமின்றி, இந்த உலகக் கோப்பையில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட, VAR தொழில்நுட்பம் மூலம் 17 தவறுகள் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது. பின், 40வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் ஹெர்னாண்டஸ்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதி முடியவிருந்த 2 நிமிடங்களுக்கு முன்னர், குரோஷியாவிற்கு ஒரு கார்னர் ஷாட் கிடைத்தது. ஆனால், அதில் கோல் மிஸ் ஆனது. பிரான்ஸ் வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

முதல் பாதியின் முடிவில், கோல் போஸ்ட்டை நோக்கி 7 முறை குரோஷியா அடித்தது. இதில், ஒரு கோல் கிடைத்தது. பிரான்ஸ் ஒருமுறை மட்டுமே அடித்தது. ஆனால், பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததால், 2 கோல் அடிக்க முடிந்தது. இதில் இருந்தே, குரோஷியா எந்தளவிற்கு தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது என்பதை அறியலாம்.

இரண்டாம் பாதி தொடங்கியதில் இருந்து மீண்டும் குரோஷியா அட்டாக்கிங்கில் ஈடுபட்டது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ரெபிச் அற்புதமாக கோல் போஸ்ட்டை நோக்கி கோல் அடிக்க முயன்றார். ஆனால், பிரான்ஸ் கோல் கீப்பர் அதனை எகிறி ஒற்றை கையால்.. அதுவும் விரல்களால் தடுக்க, பிரான்ஸ் தப்பித்தது. குரோஷியா ஆடிய ஆட்டத்தை பார்த்தால், எப்போது வேண்டுமானால், பிரான்ஸ் இரண்டாவது கோல் வாங்கும் என்பது போலவே இருந்தது.

ஆட்டத்தின் 51 வது நிமிடத்தில் பிரான்ஸின் எம்பாப்வே படு வேகமாக பந்தை கடத்தி கொண்டு குரோஷியா எல்லைக்குள் நுழைந்து கோல் அடிக்க முயன்ற போதும், குரோஷியா கோல் கீப்பர் அவ்வளவு தூரம் இறங்கி வந்து அந்த பந்தை கைப்பற்றினார். இது பிரான்சுக்கு சற்று ஏமாற்றம் அளித்தது..

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பிரான்ஸின் போக்பா அருமையான கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது. முதலில் போக்பா கோல் அடிக்க முயற்சி செய்ய, பந்து குரோஷியா கோல் கீப்பர் கையில் பட்டு மீண்டும் அவரிடமே வர, இம்முறை இடது பக்கத்தில் அருமையாக கோல் அடித்தார் போக்பா.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் பிரான்சின் 19 வயதான இளம் வீரர் எம்பாப்வே கோல் அடிக்க, அந்த அணி 4-1 என முன்னிலை பெற்றது. பிரான்ஸின் கிரீஸ்மேன் மிகச் சிறப்பாக செய்து கொடுத்த பாஸ் காரணமாக எம்பாப்வே இந்த கோல் அடித்தார். இதன மூலம், இந்த உலகக் கோப்பையில் 7 போட்டியில் ஆடிய எம்பாப்வே அடித்த 4வது கோல் இதுவாகும்.

இந்த பரபரப்பு முடிந்த அடுத்த இரு நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அலட்சியமாக செயல்பட்ட காரணமாக குரோஷியா வீரர் மன்சுகிச் கோல் அடித்தார். இருப்பினும், 4 கோல் அடித்து இருந்ததால், 4-2 என பிரான்ஸ் அணியே முன்னிலையில் இருந்தது. கோல் கீப்பர் லோரிஸிடம் பந்து இருந்தது. அருகில் மெல்ல மன்சுகிச் வந்து கொண்டிருந்தார். அப்போது, லாங் ஷாட் அடிக்காமல், வலது பக்கம் வந்த பிரான்ஸ் வீரரிடம் பந்தை பாஸ் செய்ய லோரிஸ் நினைத்தார். ஆனால், அதற்குள் லோரிஸ் கால்களுக்கு இடையே பந்தை பாஸ் கிக் செய்து மன்சுகிச் கோல் அடித்தார். 4-1 என்ற அபாரமான முன்னிலையில் இருந்த போதும், லோரிஸ் இவ்வளவு அலட்சியமாக இருந்தது ஆபத்தானது என்றே வர்ணிக்கப்பட்டது.

2-1 என்ற கணக்கில் இருந்திருந்தால், இறுதிப் போட்டியின் மிகப்பெரிய தவறாகி போயிருக்கும். லோரிஸ்க்கு நல்ல நேரம் என்றே நினைக்கத் தோன்றியது.

80 நிமிடங்களுக்கு மேல் குரோஷியாவின் ஆட்ட வேகம் சற்று குறைந்தது போல் தெரிந்தது. இதன்பின் குரோஷியாவால் மேற்கொண்டு கோல் அடிக்கவே முடியவில்லை. இரண்டாம் பாதி முடிந்து கூடுதலாக ஐந்து நிமிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் இரு அணியும் கோல் அடிக்காததால், முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

கடைசியாக 1998ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்த பிரான்ஸ், இருபது வருடங்கள் கழித்து, இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இறுதிப் போட்டியில் தோற்றதனால், குரோஷியா அணி 'நாம் எங்கே தவறு செய்தோம்' என யோசிக்கலாம். ஆனால், உண்மை என்னவெனில், குரோஷியா இந்த இறுதிப் போட்டியில் எந்த தவறும் செய்யவில்லை. பிரான்ஸ் மிகச் சிறப்பாக வென்றது. அவ்வளவே. அதுதான் தோல்விக்கு காரணம்.

முதல் பாதியில் அதிர்ஷ்டத்தின் காரணமாக சில கோல்கள் அடித்த பிரான்ஸ், இரண்டாம் பாதியில் தனது வேகத்தையும், ஆக்ரோஷத்தையும் இரு மடங்கு அதிகப்படுத்தி வெற்றிப் பெற்றுவிட்டது. இதிலிருந்து, குரோஷியாவால் கடைசி வரை மீள முடியவில்லை.

இருப்பினும். முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா, கோப்பையை வெல்லவில்லை என்றாலும், நிச்சயம் குரோஷிய மக்களின் உள்ளங்களை வென்றது என்பதை மறுக்க முடியாது!

 

 

Fifa Aasai Tambi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment