ஃபிபா உலகக் கோப்பை 2018 திருவிழா இன்று தொடங்குகிறது: முதல் போட்டியில் வெல்லப் போவது யார்? ஒரு பார்வை

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் இன்று முதல் போட்டியில் மோதுகின்றன

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.

முதன் முதலாக இந்தியாவில் பல மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. இந்தியாவில் சோனி நிறுவனம் தான் போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது. Football Extraaa, the pre, mid & post-match ஷோ என அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசுங் பூட்டியா ஆகிய இருவரும் இருமொழிகளில் உள்ள பேனல்களில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களைத் தவிர, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்கள் லூயிஸ் கார்சியா, முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் ஃபார்வேர்ட் வீரர் லூயிஸ் சாஹா, முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் இந்த ஷோக்களில் பங்கேற்கின்றனர். ‘Greatest show on earth’ எனும் பெயரில் நடக்கவுள்ள ஷோவில், ஆஷ்லே வெஸ்ட்வுட், குர்ப்ரீத் சிங், ராபின் சிங் மற்றும் நோவி கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து விரிவாக அலசி ஆராய உள்ளார்கள்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆறு மொழிகளில் 2018 ஃபிபா உலகக் கோப்பைத் தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் விநியோக வணிகம் பிரிவின் தலைவர் ராஜேஷ் கவுல் கூறுகையில், “எங்களது புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்களிடம் கால்பந்தை கொண்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. உலகில் சில தலைசிறந்த கால்பந்து வீரர்களை இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம், எங்கள் பார்வையாளர்களுக்கு போட்டியைப் பற்றிய நுண்ணிய பார்வை கிடைக்கப்பெறும்” என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தயாவில் ஒளிபரப்பாக உள்ளது.

உலகக் கோப்பைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘லிவ் இட் அப்’ எனத் துவங்கும் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ தீம் பாடலை கடந்த வாரம் நிக்கி ஜாம், வில ஸ்மித் மற்றும் இரா எஸ்ட்ரெபி ஆகியோர் பாடி வெளியிட்டனர். இந்த 3 பாடகர்களின் கலக்கல் இசையுடன் வெளியான அந்த பாடலில் 2002ன் கால்பந்து சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோவும் இடம் பெற்றிருந்தார். யூ டியூபில் மாஸ் ஹிட் அடித்த இப்பாடல் தான், இன்று முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ரிங்டோனாக உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழாவின் தொடக்க விழா இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்க இருக்கின்றது. குரூப் Aல் இடம் பிடித்துள்ள ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் இன்று முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

ரஷ்ய அணி எப்படி?

ஒன்றும் சொல்லிக் கொள்ளும் நிலைமையில் போட்டியை நடத்தும் ரஷ்ய கால்பந்து அணி இல்லை. கடந்த ஆண்டு 2017ல் மொத்தம் 11 ஆட்டங்களில் ரஷ்யா ஆடியுள்ளது. ஆனால், அதில் 3 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் வெற்றி, நான்கில் டிரா.

இந்த ஆண்டை(2018) பொறுத்தவரை, நான்கில் ஆடி மூன்றில் தோற்றுள்ளது. ஒரு போட்டி டிரா. ஆக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரஷ்ய அணி 15 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இருப்பினும், போட்டி நடைபெறும் இடம் என்பதால் ரஷ்ய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு காணப்படுகின்றனர்.

சவுதி அணி எப்படி?

ரஷ்யாவைப் போன்றே, சவுதி அணியும் கடந்த 2017ம் ஆண்டில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நடப்பாண்டை பொறுத்தவரை, கடந்த ஃபிப்ரவரி மாதம் நடந்த முதல் போட்டியில் மோல்டோவா அணியை 3-0 என வீழ்த்திய சவுதி, ஈராக்கிடம் 4-1 என படுமோசமாக தோற்றது. தொடர்ந்து உக்ரைனிடம் 1-1 என டிரா, பெல்ஜியம் அணியிடம் 4-0 என தோல்வி, அல்ஜீரியா அணியிடம் 2-0 என தோல்வி, கிரீஸிடம் 2-0 என தோல்வி, இத்தாலியிடம் 2-1 என தோல்வி, பெருவிடம் 0-3 என தோல்வி, ஜெர்மனி அணியிடம் 2-1 என தோல்வி என்று வரிசையாக சறுக்கல்களையே சந்தித்துள்ளது சவுதி அணி.

நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டங்களிலும் தோல்வி, உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வி என ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல எனும் நிலையில் தான் இரு அணிகளும் உள்ளன.

இருப்பினும், இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை, ரஷ்யா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, ரூ.257 கோடியை தட்டிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close