ஆசைத்தம்பி
FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று முன்தினம் (ஜூன் 14) ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க போட்டியில் ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வென்றது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கியுள்ளன.
முதன் முதலாக, இந்த உலகக் கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR - Video Assistant Referees) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறைப்படி மைதான நடுவர், களத்தில் நடக்கும் சம்பவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், டிவி நடுவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியும். கிட்டத்தட்ட, கிரிக்கெட்டில் Third Umpire போல.. இருப்பினும், இந்த புதிய முறையால் துல்லியமான முடிவை கொடுக்க முடியாது என பிஃபாவிற்கான நடுவர்களின் தலைவரே எச்சரித்துள்ளார்.
இப்படி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று உருகுவே அணியைப் பற்றி பார்க்கலாம்.
1901ம் ஆண்டு முதன்முதலாக கால்பந்து உலகில் நுழைந்த உருகுவே அணி, அர்ஜென்டினாவுடன் தனது முதல் போட்டியில் ஆடியது. இதில், 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இருப்பினும், தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
1916ம் ஆண்டு ஆண்டுக்கு முன்பு வரை அர்ஜென்டினாவுடன் மட்டும் 30க்கும் மேற்பட்ட கால்பந்து போட்டிகளில் உருகுவே விளையாடி இருக்கிறது. 1930ம் ஆண்டு முதன் முதலில் உலகக் கோப்பை தொடர் அறிமுகம் செய்யப்பட்ட போது, அந்தத் தொடரை நடத்தியதும் உருகுவே தான், அந்த உலகக் கோப்பையை வென்றதும் உருகுவே அணி தான்.
ஆம்! உலகிலேயே முதன் முதலில் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ருசித்த அணி உருகுவே தான். இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது . அதன்பிறகு, 1950ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையையும் உருகுவே அணிதான் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 1930, 1950 என இருமுறை உலகக் கோப்பை வென்றுள்ளது உருகுவே.
அதுமட்டுமின்றி, 1924 மற்றும் 1928 என இவ்விரு ஆண்டிலும் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரிலும் உருகுவே தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 15 முறை கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக 2011 கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை உருகுவே வென்றது. ஒட்டுமொத்தமாக, 20 அதிகாரப்பூர்வ கால்பந்து தொடர் பட்டங்களை உருகுவே அணி வென்று உலக சாதனை படைத்து இருக்கிறது. உலகின் வேறு எந்த அணியும் மொத்தமாக இவ்வளவு பட்டங்களை வென்றதில்லை.
இப்படி பலம் பொருந்திய அணியாக வலம் வரும் உருகுவே, தற்போது ஃபிபா தரவரிசையில் 14வது இடத்தில் உள்ளது. இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகவே உருகுவே பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பைக்கான உருகுவே அணி வீரர்கள் விவரம்:
கோல் கீப்பர்கள்:
ஃபெர்னாண்டோ முஸ்லெரா, மார்ட்டின் கம்பானா, மார்ட்டின் சில்வா
டிஃபென்டர்:
ஜோஸ் மரியா கிமின்ஸ், தியாகோ கோடின் (கேப்டன்), கில்லர்மோ வரேலா, கேஸ்டன் சில்வா, மேக்சி ஃபெரைரா, செபாஸ்டியன் கோட்ஸ், மார்ட்டின் கேசர்ஸ்.
மிட்ஃபீல்டர்:
கார்லஸ் சான்ச்சஸ், ரோட்ரிகோ பெண்டான்குர், கிரிஸ்டியன் ரோட்ரிக்ஸ், நாஹிடன் நான்டெஸ், ஜியோர்ஜியன் டி அராஸ்கேட்டா, லூகாஸ் டொரைரா, மாடியாஸ் வெகினோ, தியாகோ லக்ஸல்ட்.
ஃபார்வேர்ட்ஸ்:
லூயிஸ் சாரஸ், க்ரிஸதியன் ஸ்துவானி, மேக்சி கோமெஸ், ஜோனதன் உர்ரேடாவிஸ்கயா, எடின்சன் கவானி.
தலைமை பயிற்சியாளர் - ஆஸ்கர் டபரெஸ்.
சமீபத்திய செயல்பாடுகளை வைத்து பார்க்கும் பொழுது உருகுவே அணி, தொடர்ந்து வெற்றிகளையே பெற்று வந்திருக்கிறது. பயிற்சிப் போட்டிகள், நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகள் என பெரும்பாலும் வெற்றி தான். குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் ஆடிய மூன்று போட்டியிலும் செக் ரிபப்ளிக், வேல்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளை உருகுவே வீழ்த்தியுள்ளது.
லூயில் சுவாரஸ், எடின்சன் கவானி போன்ற நட்சத்திர வீரர்கள் உருகுவே அணிக்கு பலம் சேர்ப்பதால் அந்த அணி இறுதிப்போட்டி வரை செல்ல கூடிய தகுதியுடையது என்பது வல்லுனர்களின் கணிப்பு. பல தனியார் விளையாட்டு அமைப்புகள், உருகுவே அணி பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்று என்றே கணித்துள்ளன. ஆன்லைன் சர்வேயிலும், 63% ரசிகர்கள், உருகுவே அணி 2018 உலகக் கோப்பையில் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றே வாக்களித்துள்ளனர். இந்த கணிப்புகளுக்கு ஏற்றார் போல், உருகுவே அணியின் செயல்பாடுகளும் உள்ளன.
குரூப் Aல் இடம் பிடித்துள்ள உருகுவே, தனது பிரிவில் ரஷ்யா, எகிப்து அணிகளுடன் மோதுகின்றது.
இதில், நேற்று(ஜூன் 15) நடைபெற்ற எகிப்துடனான ஆட்டத்தில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் இந்த உலகக் கோப்பையை தொடங்கியுள்ளது உருகுவே. இந்த வெற்றி, நிச்சயம் உருகுவே அணிக்கு பல மடங்கு தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும் என்பது உறுதி!.
கோப்பையை வெல்லாவிட்டாலும் நிச்சயம் காலிறுதி வரை முன்னேறும் என உறுதியாக நம்பலாம்!.