Advertisment

ஃபிபா உலகக்கோப்பை 2018: லீக் சுற்று முதல் காலிறுதி வரை! ஓர் அலசல்

எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபிபா உலகக்கோப்பை 2018: லீக் சுற்று முதல் காலிறுதி வரை! ஓர் அலசல்

ஆசைத் தம்பி

Advertisment

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழா, ஜூலை 15ம் தேதியோடு நிறைவடைகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டவை. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்து இருந்தது.

முதன் முதலாக இந்தியாவில் பல மொழிகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவில் சோனி நிறுவனம் போட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. Football Extraaa, the pre, mid & post-match ஷோ என அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைசுங் பூட்டியா ஆகிய இருவரும் இருமொழிகளில் உள்ள பேனல்களில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களைத் தவிர, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்கள் லூயிஸ் கார்சியா, முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டட் ஃபார்வேர்ட் வீரர் லூயிஸ் சாஹா, முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் இந்த ஷோக்களில் பங்கேற்று வருகின்றனர். ‘Greatest show on earth’ எனும் பெயரில் நடந்து வரும் ஷோவில், ஆஷ்லே வெஸ்ட்வுட், குர்ப்ரீத் சிங், ராபின் சிங் மற்றும் நோவி கபாடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

ரஷ்ய கீழ் அவை பெண் எம்.பியும் கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்ன்யோவா, 'உலகக் கோப்பையின் போது ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று எச்சரித்தது சுவாரஸ்யமாக இளசுகளால் சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது.

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றது. கடைசியாக அந்த அணி 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு இம்முறை தான் களமிறங்கியது. பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு களம் இறங்கியது.

2002-ம் ஆண்டு காலிறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக இம்முறை தான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றிருந்தது இதுவே முதன்முறையாகும்.

அதேசமயம், நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான விஷயம் தான்.

இப்படி பலத்த எதிர்பார்ப்புகளையும், ரசிகர்களின் பேராதரவையும் பெற்று அனைத்து அணிகளும் களமிறங்கின.

லீக் சுற்றில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய பலம் வாய்ந்த அணியான அர்ஜென்டினா, கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா ஆக, நொந்து போனார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பார்த்து கடுப்பாகி போன, அர்ஜென்டினா முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, 'இப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது' என பகிரங்கமாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அர்ஜென்டினா இந்த வேதனையில் இருக்க, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணி லீக் சுற்றில் மெக்சிகோ அணியிடம் தோற்றே போனது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எப்படியோ தட்டுத் தடுமாறி அர்ஜென்டினா, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, ஜெர்மனியோ லீக் சுற்றோடு வெளியேறியது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், 1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு, இப்போது தான் முதல் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

லீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

நாக் அவுட் சுற்றில் ஒரே நாளில் இரு கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் ஒரே நாளில் வெளியேற, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கேரளாவில் ஒரு மெஸ்ஸி ரசிகர் தற்கொலையே செய்து கொண்டார்.

பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதிச் சுற்றின் முடிவில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணியும் காலிறுதி சுற்றோடு வெளியேறியது. நெய்மரின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வலி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார். அதுமட்டுமின்றி, பிரேசில் சென்றடைந்த வீரர்களின் பேருந்து மீது அந்நாட்டு ரசிகர்கள் முட்டை மற்றும் தக்காளி வீசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடரை விட்டு வெளியேறிய நிலையில், 38 வயதான ரஷ்யாவின் டிபென்ஸ் வீரர் செர்கெய் இக்னாஷேவிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இவர் ரஷியா அணிக்காக 127 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.

இவ்வளவு சோதனைகள், வேதனைகள், வெற்றிகள் என அனைத்தையும் கடந்து இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.

Fifa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment