ஆசைத் தம்பி
FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று (ஜூன் 14) ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க போட்டியில் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இதில், ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கியுள்ளன.
போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று கொலம்பியா அணியைப் பற்றி பார்க்கலாம்.
1938ல் கொலம்பியா அணி தனது முதல் அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டியில் விளையாடியது. 1938 ஃபிப்ரவரி 10ம் தேதி மெக்சிகோ அணிக்கு எதிராக ஆடியது தான் கொலம்பியா அணியின் முதல் போட்டி. ஆனால், அதில் 1-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி தோற்றது.
அதன்பிறகு 1945ம் ஆண்டு வரை கொலம்பியா அணி வேறு எந்த போட்டியிலும் ஆடவில்லை. அதே ஆண்டு நடந்த தென் அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரில் தான் கொலம்பியா பங்கேற்றது. அதில், ஐந்தாம் இடம் பிடித்தது கொலம்பியா.
உலகக் கோப்பையை பொறுத்தவரை, 1958ம் ஆண்டு சுவீடனில் நடந்த உலகக் கோப்பையில் முதன் முதலாக பங்கேற்றது கொலம்பியா அணி. ஆனால், தனது பிரிவில் கடைசி இடத்தையே அந்த அணியால் பிடிக்க முடிந்தது. இவ்வாறு, முதல் உலகக் கோப்பையை சோகமுடனே ஆரம்பித்தது கொலம்பியா.
அதன்பிறகு, 1990 வரை கொலம்பியா அணி உலகக் கோப்பைக்கு தகுதியே பெறவில்லை. 1990 உலகக் கோப்பையில் 14வது இடமும், 1994 உலகக் கோப்பையில் 19வது இடமும், 1998ல் நடந்த உலகக் கோப்பையில் 21வது இடமும் பிடித்தது.
பின், மீண்டும் 2010 வரை கொலம்பிய அணி உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறவில்லை. 2014ல் நடந்த.. அதாவது கடந்த உலகக் கோப்பையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் காலிறுதி சுற்று வரை முன்னேறிய கொலம்பியா, 5வது இடம் பிடித்து அசத்தியது. தற்போது 2018 உலகக் கோப்பைக்கும் கொலம்பியா தகுதிப் பெற்றுள்ளது.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் கொலம்பியா அணி வீரர்கள் விவரம்,
கோல் கீப்பர்:
டேவிட் ஓஸ்பினோ, கேமிலோ வர்கஸ், ஜோஸ் ஃபெர்னாண்டோ கோட்ராடோ
டிஃபென்டர்:
கிறிஸ்டியன் சபாடா, ஆஸ்கார் மோரிலோ, சான்டியாகோ ஏரியஸ், யேரி மினா, ஜோஹன் மொஜிகா, ஃபாரிட் டயாஸ், டேவின்சன் சாஞ்சஸ்.
மிட் ஃபீல்டர்:
வில்மர் பேரியோஸ், கார்லஸ் சாஞ்சஸ், ஏபெல் அகிலார், ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், ஜான் காட்ரேடோ, மேடஸ் உரிப், ஜெஃபெர்சன் லெர்மா, ஜுவான் ஃபெர்னாண்டோ குவான்டெரோ.
ஃபார்வேர்ட்ஸ்:
கார்லஸ் பெக்கா, ரடாமேல் ஃபெல்கோ(கேப்டன்), லூயிஸ் முரியல், மிகல் போஜ்ரா, ஜோஸ் இஸ்கிர்டோ.
தலைமை பயிற்சியாளர் - ஜோஸ் பெகெர்மேன்
உடற்தகுதி பயிற்சியாளர் - எடுவார்டோ உர்டாசுன்
கோல் கீப்பிங் பயிற்சியாளர் - எடுவார்டோ நினோ.
இந்த டீமுடன் தான் கொலம்பியா அணி இந்த உலகக் கோப்பை கோதாவில் குதித்துள்ளது.
2017ல் கொலம்பியா அணியின் செயல்பாடு எப்படி?
2017ம் ஆண்டு மொத்தம் 10 ஆட்டங்களில் கொலம்பியா ஆடியுள்ளது. இதில் இரு ஆட்டங்களில் மட்டுமே அந்த அணி தோற்றுள்ளது.
பொலிவியா அணிக்கு எதிராக 1-0 என வெற்றி,
ஈகுவடார் அணிக்கு எதிராக 0-2 என வெற்றி,
ஸ்பெயின் அணிக்கு எதிராக 2-2 என டிரா,
கேமரூன் அணிக்கு எதிராக 0-4 என வெற்றி,
வெனிசுலா அணிக்கு எதிராக 0-0 என டிரா,
பிரேசில் அணிக்கு எதிராக 1-1 என டிரா,
பராகுவே அணிக்கு எதிராக 1-2 என தோல்வி
பெரு அணிக்கு எதிராக 1-1 என டிரா,
தென் கொரியா அணிக்கு எதிராக 2-1 என தோல்வி,
சீனா அணிக்கு எதிராக 0-4 என வெற்றி.
இதில், மிகப்பெரும் அணிகளான ஸ்பெயினுக்கு எதிராக 2-2 என டிரா, பிரேசில் அணிக்கு எதிராக 1-1 என தோல்வியை சந்திக்காமல் போட்டிகளை டிரா செய்துள்ளது கொலம்பியா அணி.
2018ல் கொலம்பியா அணியின் செயல்பாடு எப்படி?
வலிமையான ஃ பிரான்ஸ் அணியை 2-3 என வீழ்த்திய கொலம்பியா, ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளை டிரா செய்தது. இருப்பினும், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கடைசி ஆட்டத்துக்கு முன்பு வரை கொலம்பியா அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதை உறுதி செய்யாமலேயே இருந்தது. பெரு அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததால் ரஷ்ய உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
குரூப் Hல் இடம் பெற்றுள்ள கொலம்பியா அணி, தனது குரூப்பில் போலந்து, செனகல் மற்றும் ஜப்பான் அணிகளை லீக் சுற்றில் எதிர்கொள்கிறது. தற்போது கொலம்பியா இருக்கும் ஃபார்மில், நிச்சயம் குரூப் பிரிவில் முதலிடம் பிடிக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
கொலம்பியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் நாள்:
ஜூன் 19 – கொலம்பியா vs ஜப்பான்
ஜூன் 24 – போலந்து vs கொலம்பியா
ஜூன் 28 – செனகல் vs கொலம்பியா
1990-ம் ஆண்டு காலக் கட்டத்துக்கு பிறகு கொலம்பியா அணி தற்போது தான் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளது. நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், குயின்டெரோ ஆகியோர் முன்னாள் சிறந்த வீரர்களான கார்லோஸ் வால்டர்ராமா, ஃபாஸ்டினோ அஸ்பிரில்லா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர்.
மிட்ஃபீல்டர்களாக ஏபெல் அகிலார், கார்லஸ் சாஞ்சஸ் அணிக்கு வலுச் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஸ்டிரைக்கர்களான லூயிஸ் முரியல், கோட்ராடோ, வில்மார் பரியோஸ், எட்வின் கார்டோனா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரேடமெல் ஃபல்காவோ இந்த சீசனில் பிரெஞ்ச் லீக்கில் மோனாக்கோ கிளப் அணிக்காக 18 கோல்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். டிபன்ஸில்கிறிஸ்டியன் சபாடா, டேவின்சன் சாஞ்சஸ், யேரி மினா ஆகியோரும் கைக்கோர்க்கும் பட்சத்தில் உறுதியாக கொலம்பியா அணியால் மிகப்பெரும் அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்து, இந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.