Advertisment

மெஸ்ஸிக்கே தண்ணி காட்டிய ஐஸ்லாந்து அணி! யார் இவர்கள்? ஒரு பார்வை

3,33,000 மக்கள் தொகை கொண்ட நாடு அர்ஜென்டினாவை கட்டுப்படுத்தியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மெஸ்ஸிக்கே தண்ணி காட்டிய ஐஸ்லாந்து அணி! யார் இவர்கள்? ஒரு பார்வை

Iceland FootBall Team

ஆசைத் தம்பி

Advertisment

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில், நேற்று (ஜூன் 16) நடந்த அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய ஐஸ்லாந்து அணி 1-1 என டிரா செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற 'டி' பிரிவு ஆட்டத்தில், அர்ஜென்டினாவும், ஐஸ்லாந்து மோதின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ஐஸ்லாந்து அணியின் ஆல்ஃபிரயோ ஃபின்பொகாசன் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவானது. உலகக் கோப்பையில் ஐஸ்லாந்து அணி வரலாற்றில் கோல் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை ஆல்ஃபிரயோ ஃபின்பொகாசன் பெறுகிறார்.

ஒவ்வொரு ஐஸ்லாந்து வீரரும் 7 அடி இருப்பார்கள் போல... அனைவரும் போஸ்ட் கம்பம் போன்றே காட்சியளித்தனர். உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த தொடரில் பங்கேற்று இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, நேற்று அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில், மெஸ்ஸியின் கள வியூகங்களை உடைத்து, அவரை சோர்ந்து போக வைத்த ஐஸ்லாந்து அணியைப் பற்றி பார்க்கலாம்.

ஐஸ்லாந்து கால்பந்து அணியின் செல்லப் பெயர் 'நம்ம பசங்க' (Our Boys) என்பதாகும். அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணியை அப்படித் தான் அடையாளப்படுத்துகிறார்கள்.

ஐஸ்லாந்து கால்பந்து லீக் 1912ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஐஸ்லாந்து அணி தனது முதல் சர்வதேச கால்பந்து போட்டியை 1930 ஜூலை 29ம் தேதி விளையாடியது. ஃபரோ தீவுகள் அணிக்கு எதிரான அப்போட்டியில், 1-0 என ஐஸ்லாந்து வென்றது. இருப்பினும், ஃபிபா கால்பந்து கூட்டமைப்பில் அப்போது ஐஸ்லாந்து உறுப்பினராகவில்லை. 1946ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தான் முதன் முதலாக, ஃபிபாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்து ஆடியது. டென்மார்க் அணியுடனான அப்போட்டியில், 0-3 என ஐஸ்லாந்து தோற்றது. அதன்பிறகு, ஃபிபா அங்கீகரிப்புடன் தனது முதல் சர்வதேச கால்பந்து வெற்றியை ஃபின்லாந்து அணிக்கு எதிராக 1947ம் ஆண்டு பெற்றது ஐஸ்லாந்து அணி.

ஐஸ்லாந்து கால்பந்து கூட்டமைப்பு தொடங்கியதில் இருந்து முதல் 20 ஆண்டுகளுக்கு, அந்த அணி ஃபிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியிலோ அல்லது UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுத் தொடரிலோ ஐஸ்லாந்து பங்கு பெறவேயில்லை.

முதன் முதலாக, 1954ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதிச் சுற்று போட்டிகளில் கலந்து கொள்ள ஐஸ்லாந்து விண்ணப்பித்தது. ஆனால், அதனை ஃபிபா நிராகரித்துவிட்டது. அதன்பிறகு, மீண்டும் 1958ல் விண்ணப்பித்த ஐஸ்லாந்து அணிக்கு க்ரீன் சிக்னல் கிடைக்க, தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றது. ஆனால், ஒரு வெற்றி கூட பெற முடியாமல், தனது பிரிவில் கடைசி இடத்தையே ஐஸ்லாந்து அணியால் பிடிக்க முடிந்தது.

1974ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் தவறாமல் ஃபிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் ஐஸ்லாந்து கலந்து கொண்டு வருகிறது. எதிலும் ஐஸ்லாந்து அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.

ஆனால், 2016ல் புதிய சகாப்தம் உருவானது. அந்தாண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடருக்கு ஐஸ்லாந்து அணி தகுதிப் பெற்றது. அதுவே மிகப்பெரிய ஆச்சர்யமான விஷயம் தான். ஆனால், மற்றொரு பேராச்சர்யமாக அந்தத் தொடரில், காலிறுதி வரை முன்னேறி பிரமிக்க வைத்தது ஐஸ்லாந்து அணி. பேராச்சர்யம் இன்னும் முடியவில்லை... இந்த ஐரோப்பியா சாம்பியன்ஷிப் தொடரில், 16வது சுற்றில் உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது ஐஸ்லாந்து. இதனை ஐஸ்லாந்து மக்கள் ஒரு மாதத்திற்கு கொண்டாடித் தீர்த்தனர். அதுமட்டுமின்றி, ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக தேர்வானது ஐஸ்லாந்து அணி.

1994ம் ஆண்டு, ஃபிபா கால்பந்து ரேங்கிங்கில் தனது சிறந்த தரவரிசையான 37வது இடத்தை பதிவு செய்தது ஐஸ்லாந்து. அதற்கு முன் வரை இப்படியொரு சிறந்த தரநிலையை அந்த அணி அடைந்ததில்லை. ஆனால், 2016ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது தான் அந்த அணியில் ஆகச் சிறந்த செயல்பாடாக பார்க்கப்படுகிறது. தற்போது அந்த அணியின் ஃபிபா ரேங்கிங் 22. அவர்களது மிகச் சிறந்த தரநிலை என்பது 18வது இடமாகும்.

இப்படி ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஐஸ்லாந்து அணி, 2018 ஃபிபா உலகக் கோப்பைக்கு முதன் முதலில் தகுதிப் பெற்றது. ஃபிபா உலகக் கோப்பையில் கலந்து கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகை (3,33,000) கொண்ட நாடு எனும் பெருமையையும் பெற்றது ஐஸ்லாந்து அணி.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஐஸ்லாந்து அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

ஹேன்னஸ் ஹல்டோர்சன், ஃபிரெட்ரிக் ஸ்க்ராம், ருனார் அலெக்ஸ் ருனார்சன்.

டிஃபென்டர்:

பிர்கிர் மர் சேவர்சன், சாம்யூல் ஃபிரியோஜோன்சன், ஸ்வெரிர் இங்கி இங்காசன், ரக்னர் சிகுரோசன், கரி அர்னாசன், ஹோல்மர் எய்ஜோல்ஃப்சன், ஹொரோர் ஜோர்க்வின் மக்னூசன், அரி ஃபிரெயர் ஸ்குவால்சன்.

மிட் ஃபில்டர்:

ஆல்பெர்ட் கோமுன்ட்சன், ஜொஹான் பெர்க் கோமுன்ட்சன், பிர்கிர் ஜார்னாசன், கில்ஃபி சிகுரோசன், ஒலாஃபுர் இங்கி ஸ்குவார்சன், ஆரோன் குனார்சன் (கேப்டன்), ருரிக் கிஸ்லாசன், எமில் ஹால்ஃப்ரியோசன், ஆர்னர் இங்க்வி டிராஸ்டாசன்.

ஃபார்வேர்ட்ஸ்:

ஜோன் பெர்க்மென் சிகுரோர்சன், ஆல்ஃபிரயோ ஃபின்பொகாசன், ஜோன் டாய் பூவர்சன்... பூவரசன் கிடையாதுங்க... பூவர்சன்.

தலைமை பயிற்சியாளர் - ஹெய்மிர் ஹால்க்ரிம்சன்,

துணை பயிற்சியாளர் - ஹெல்கி கோல்வியோசன்,

கோல் கீப்பிங் பயிற்சியாளர் - குமுண்டுர் ஹ்ரியோர்சன்,

குரூப் Dயில் இடம் பெற்றுள்ள ஐஸ்லாந்து அணி, தனது பிரிவில் அர்ஜென்டினா, குரோஷியா, நைஜீரியா அணிகளுடன் மோதுகிறது. இதில், நேற்று நடந்து முடிந்த அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் 1-1 என டிரா செய்து 2014ம் ஆண்டு உலகக் கோப்பை ரன்னர் அப் அணியான அர்ஜென்டினாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி கால்பந்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருந்ததை நாம் முன்பே பேசினோம். அதற்கு முன்னதாக லீக் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவும் செய்திருந்தது ஐஸ்லாந்து.

அந்த ஆட்டத்தில் ரொனால்டோவை சிறப்பாக ஐஸ்லாந்து வீரர்கள் கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, ஐஸ்லாந்து அணி வீரர் ஜோஹான் பெர்க் குட்மண்ட்சன் கூறுகையில், “நாங்கள் ரொனால்டோவை அன்று அமைதியாக்கினோம். மெஸ்ஸி-க்கும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். மெஸ்ஸி இருக்கும் போது தடுப்பாட்டம் வலுவாக இருக்க வேண்டும்” என்றார். தற்போது அதை செய்து காட்டியிருக்கிறது ஐஸ்லாந்து அணி. நேற்றைய போட்டியில் மெஸ்ஸி எளிய வாய்ப்புகளை கோட்டை விட்டதை தவிர்த்து, அர்ஜென்டினா அணியை தலை தூக்கவே விடாமல் செய்துவிட்டனர் ஐஸ்லாந்து வீரர்கள். குறிப்பாக, மெஸ்ஸியை டோட்டலாக டயர்ட் ஆக்கிவிட்டனர் என்றே கூறலாம்.

முதல் போட்டியில் அர்ஜென்டினாவுக்கே போக்கு காட்டிய ஐஸ்லாந்து அணி, தனது பிரிவில் உள்ள இதர அணிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

'நம்ம பசங்க' மேலும் கலக்க வாழ்த்துக்கள்!.

Lionel Messi Argentina Vs Iceland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment