ஆசைத்தம்பி
FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் ஈரான் அணியின் பலம், பலவீனம் பற்றி அலசும் கட்டுரை இது!
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொல ம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷ்யா, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கியுள்ளன.
உலகக் கோப்பைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘லிவ் இட் அப்’ எனத் துவங்கும் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ தீம் பாடல் தான் இன்று உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ரிங் டோன்.
வழக்கத்தைவிட இம்முறை இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பெருமளவு ரசிக்கப்படுகின்றன. அந்தளவிற்கு இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும், இந்திய பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2014 உலகக் கோப்பையை விட அதிகமாகவே உள்ளது. ரசிகர்களின் வெறித்தனமும் அதிகரித்துள்ளது.
உயரமான வீரர்கள் கொண்ட ஐஸ்லாந்து அணியிடம் அர்ஜன்டினா டிரா செய்தது, சோகத்தின் உச்சிக்கு மெஸ்ஸி சென்றது, 'இப்படியே விளையாடினால் நாட்டிற்கு திரும்ப முடியாது' என மாரடோனா எச்சரித்தது, உலக சாம்பியன் ஜெர்மனி முதல் போட்டியிலேயே தோற்றது, ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலினால் ஸ்பெயின் வெற்றி வாய்ப்பை இழந்தது, கொலம்பிய வீரர் முதல் ரெட் கார்ட் வாங்கியது என முதல் வாரத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், திருப்பங்கள் என வலம் வரும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று ஈரான் அணியைப் பற்றி பார்க்கலாம்.
1920ம் ஆண்டு ஈரான் கால்பந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது அணியின் பெயர் 'டீம் மெல்லி' (Team Melli). இதன் பின் 21 ஆண்டுகள் கழித்து 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி காபூலுக்கு வெளியே தனது முதல் போட்டியில் ஈரான் விளையாடியது. பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அப்போட்டியில் ஈரான் 1-0 என வென்றது.
அதுமட்டுமின்றி, தனது முதல் சர்வதேச ஆட்டத்தை ஆகஸ்ட் 25, 1941ம் ஆண்டு ஈரான் விளையாடியது. வெற்றிகரமான ஆசிய அணிகளில் ஒன்றாக திகழும் ஈரான், மூன்று முறை ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. 1968, 1972 மற்றும் 1976 என மூன்று முறை ஈரான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, 1976ல் நடந்த ஒலிம்பிக் தொடரில் காலிறுதி வரை முன்னேறி, உலக நாடுகளுக்கு ஆச்சர்யம் அளித்தது.
உலகக் கோப்பையை பொறுத்தவரை, இதுவரை ஐந்து முறை ஈரான் அணி தகுதிப் பெற்றுள்ளது. 1978, 1998, 2006, 2014 என நான்கு முறை உலகக் கோப்பையில் களமிறங்கிய ஈரான், இம்முறையும் உலகக் கோப்பை கோதாவில் குதித்துள்ளது.
ஆனால், இதுவரை நாக் அவுட் சுற்றை ஈரான் தாண்டியதில்லை. 1998ல் நடந்த உலகக் கோப்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது தான் ஈரான் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றியாகும்.
2018 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள ஈரான் அணி வீரர்கள் விவரம்,
கோல் கீப்பர்:
அலிரெசா பெய்ரன்வண்ட், மொஹம்மத் மசேஹெரி, அமிர் அபேத்சதே.
டிஃபென்டர்:
ரவுஸ்பெஹ் செஷ்மி, மிலாத் மொஹம்மதி, மோர்டெசா பௌரலிகஞ்சி, மொஹம்மத் ரெசா கன்சாதே, பெஜ்மன் மோண்டாசெரி, மஜித் ஹொசைனி, ரமின் ரெசேயன்.
மிட்ஃபீல்டர்:
மெஹ்தி டோரபி, எஹ்சான் ஹஜ்சாஃபி, சயீத் எசாடொலாஹி, மசோத் ஷோஜே (கேப்டன்), ஓமித் இப்ராஹிமி வாஹித் அமிரி, சமன் கோடோஸ், அலிரெசா ஜஹான்பக்ஷ், ஆஷ்கான் தேஜாக்.
ஃபார்வேர்ட்ஸ்:
கரீம் அன்சாரிஃபர்ட், ரெசா கூச்சன்னேஜத், மெஹ்தி தரேமி, சர்தார் அஸ்மோன்.
தலைமை பயிற்சியாளர் - கார்லஸ் கியூரெஸ்.
கோல் கீப்பிங் பயிற்சியாளர் - அலெக்சாண்ட்ரே லோபஸ்.
ஈரான் அணியின் தற்போதைய ஃபார்ம் எப்படி?
இந்தாண்டில் இதுவரை மொத்தம் எட்டு போட்டிகளில் ஆடியுள்ள ஈரான், 5 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இதில் துனீசியா மற்றும் துருக்கி அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டும் ஈரான் தோற்றது.
உலகக் கோப்பையில் முதல் சுற்றே ஈரான் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் அணி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இதில், மொராக்கோ அணியுடனான முதல் போட்டியில், எதிரணி வீரரின் சேம் சைட் கோல் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இருப்பினும், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினை வீழ்த்துவது என்பது மிகக் கடினமான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் ஈரானின் பல வருட உலகக் கோப்பை கனவை நனவாக்கும் முயற்சியில் அலிரெசா ஜஹான்பக், சர்தார் அஸ்மோன், ஆஷ்கான் தேஜாக் மற்றும் கேப்டன் மசோத் ஷோஜே ஆகியோர் இறங்கவுள்ளனர்.
ஸ்டிரைக்கர் சர்தார் அஸ்மோனின் அற்புதமான பந்தைக் கடத்தும் திறன், அதற்கு பக்கபலமாக இருக்கும் அலிரேசா ஜகான்பக்ஸ், கோல் அடிப்பதில் கிங் அஷ்கான் ஆகியோர் அணிக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித் தருவார்கள் என்று நம்பப்படுகிறது. அணிக்குக் கூடுதல் பலமாக சமன் கோடோஸ், மெஹ்தி தரேமி, கரீம் அன்சாரிஃபர்ட் ஆகியோர் உள்ளனர்.
அந்த அணிக்கு பலவீனம் என்பது மிகப்பெரிய அணிகளுடன் சமீப காலமாக விளையாடாமல் இருப்பதேயாகும். இதனால் உலகக் கோப்பையில் அந்த அணி தனது திறமையை எப்படி வெளிப்படுத்தப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஈரான் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்பெயினைப் பொறுத்தவரை போர்ச்சுகல் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் ரொனால்டோ என்ற ஒற்றை மனிதனால், தங்களது வெற்றியை பறிகொடுத்தது ஸ்பெயின். 3-3 என்ற கோல் கணக்கில் அந்தப் போட்டி டிராவானது. இதனால், இன்றைய போட்டியில் தங்களது முதல் வெற்றியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய சூழலில் ஸ்பெயின் அணி உள்ளது. இவற்றினை மீறி, ஈரான் அணி ஸ்பெயினை வெல்ல வேண்டும் என்பது நிச்சயம் சவாலானது தான்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.