/tamil-ie/media/media_files/uploads/2018/06/s341.jpg)
FIFA World Cup Foot Ball 2018: Full view of Saudi Arabia team
FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நாளை ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.
போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று சவுதி அரேபியா அணியைப் பற்றி பார்க்கலாம்.
சவுதி அரேபியா அணியின் கால்பந்து கூட்டமைப்பு 1956ல் நிறுவப்பட்டது. இருப்பினும், 1984ம் ஆண்டு நடந்த AFC ஆசிய கோப்பைத் தொடருக்கு தகுதிப் பெற்றதற்கு முன்பு வரை, அந்த அணி வேறு எந்தத் தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. தங்களது முதல் AFC ஆசிய தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது சவுதி கால்பந்து அணி. அதன்பின், ஆசிய கண்டத்தின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக சவுதி அரேபியா வலம் வந்தது. 1984ம் ஆண்டுக்குப் பிறகு, தொடர்ச்சியாக நான்கு AFC ஆசிய கோப்பைத் தொடருக்கு தகுதிப் பெற்ற சவுதி அணி, அதில் 1988 மற்றும் 1996ல் நடந்த தொடரில் கோப்பையையும் வென்றது. அதன் பிறகு, தொடர்ச்சியாக ஆசிய கோப்பை தொடர்களுக்கு தகுதிப் பெற்று வந்தாலும், 2007ம் ஆண்டு சவுதி அரேபியா அணியின் செயல்பாடுகள் டாப் கிளாஸில் அமைந்தது.
உலகக் கோப்பையை பொறுத்தவரை, 1994ம் ஆண்டு முதன் முதலாக சவுதி அரேபியா தகுதிப் பெற்றது. அந்த உலகக் கோப்பையில், ஜோர்ஜ் சோலாரி, சயீத் அல்-ஓவைரன், சமி அல்-ஜேபர், மஜித் அப்துல்லா போன்ற வீரர்களின் அபார ஆட்டத்தால், பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகளை சவுதி அரேபியா வென்றது. இருப்பினும், சுவீடன் அணிக்கு எதிராக சவுதி தோற்றது.
இதன்பிறகு, அடுத்தடுத்து மூன்று உலகக் கோப்பை தொடர்களில் சவுதி அணி தகுதிப் பெற்றாலும், குரூப் பிரிவை அவர்கள் தாண்டவில்லை. 2010 மற்றும் 2014 உலகக் கோப்பைத் தொடர்களுக்கு சவுதி தகுதி பெறவில்லை. இந்நிலையில், இப்போது 2018 உலகக் கோப்பைக்கு மீண்டும் சவுதி அரேபியா தகுதிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2018 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள சவுதி அரேபியா அணி வீரர்கள் விவரம்,
கோல் கீப்பர்கள்:
அப்துல்லா அல்-மாயுஃப், யாசர் அல் மொசைலம், மொஹம்மத் அல்-ஓவைஸ்
டிஃபென்டர்:
மன்சூர் அல்-ஹர்பி, ஒசாமா ஹவ்சாவி, அலி அல் புலைஹி, ஓமர் ஹவ்சாவி, மொஹம்மத் அல்-பிரைக், யாசர் அல்-ஷாஹ்ரானி, மோடஸ் ஹவ்சாவி.
மிட்பீல்டர்:
சல்மான் அல்-ஃபராஜ், யாஹ்யா அல்- ஷேஹ்ரி, ஹட்டன் பஹேப்ரி, அப்துல்மேலக் அல்-கைப்ரி, முஹமத் கனோ, அப்துல்லா ஓடேய்ஃப், அப்துல்லா அல்-கைப்ரி, ஹௌசைன் அல்-மொகாவி, தைசிர் அல்-ஜசிம், சலேம் அல்-தவ்சாரி, ஃபஹத் அல்-முவலத்.
ஃபார்வேர்ட்ஸ்:
மொஹம்மத் அல்-சாலாவி, முஹன்னத் அசிரி.
தலைமை பயிற்சியாளர் - ஜுவான் ஆண்டோனியோ பிஸ்ஸி
கேப்டன் - ஒசாமா ஹவ்சாவி.
குரூப் Aல் இடம் பிடித்துள்ள சவுதி அரேபியா, தனது குரூப்பில் ரஷ்யா, எகிப்து, உருகுவே அணிகளுடன் மோதுகின்றன.
சவுதி மோதும் போட்டி நடைபெறும் நாள்:
ஜூன் 14 – சவுதி அரேபியா vs ரஷ்யா
ஜூன் 20 – சவுதி அரேபியா vs உருகுவே
ஜூன் 25 – சவுதி அரேபியா vs எகிப்து
சவுதி அரேபியா அணியின் சமீபத்திய செயல்பாடுகள் எப்படி உள்ளது என ஆராய்ந்து பார்த்தோமேயானால், கடந்த 2017ம் ஆண்டில், மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சவுதி தோற்றது. அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் தோற்றது. இதன் பிறகு ஜப்பானுடன் நடந்த போட்டியில் 1-0 என சவுதி வென்றது. தொடர்ந்து ஜமைக்கா அணியை 5-2 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
அதன்பின் கானா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்ற சவுதி, லாட்வியா அணியை 0-2 என வீழ்த்தியது. அடுத்த போட்டியில் வலிமையான போர்ச்சுகல் அணியை எதிர்த்து விளையாடிய சவுதி, 3-0 என அடி வாங்கியது.
தொடர்ந்து பல்கேரியாவிடம் 1-0 என தோல்வி, குவைத்திற்கு எதிராக 1-2 என வெற்றி, மீண்டும் ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியில் 0-0 என டிரா, ஓமன் அணியிடம் 0-2 என தோல்வி என மிக மோசமான செயல்பாட்டையே 2017ம் ஆண்டு வெளிப்படுத்தியது சவுதி அரேபியா.
2018ம் ஆண்டு செயல்பாட்டை பார்க்கும் பொழுது, இதுவரை 9 ஆட்டங்களில் ஆடியுள்ளது. இதிலும் அதே போன்றதொரு மோசமான ஆட்டத்திறனை சவுதி அணி வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஃபிப்ரவரி மாதம் நடந்த முதல் போட்டியில் மோல்டோவா அணியை 3-0 என வீழ்த்திய சவுதி, ஈராக்கிடம் 4-1 என படுமோசமாக தோற்றது. தொடர்ந்து உக்ரைனிடம் 1-1 என டிரா, பெல்ஜியம் அணியிடம் 4-0 என தோல்வி, அல்ஜீரியா அணியிடம் 2-0 என தோல்வி, கிரீஸிடம் 2-0 என தோல்வி, இத்தாலியிடம் 2-1 என தோல்வி, பெருவிடம் 0-3 என தோல்வி, ஜெர்மனி அணியிடம் 2-1 என தோல்வி என்று வரிசையாக சறுக்கல்களையே சந்தித்துள்ளது சவுதி அணி.
பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாத அணியாக இருந்தாலும், இந்த தோல்விகள் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், தீவிர முயற்சி மேற்கொண்டுவரும் சவுதி அணி வீரர்கள், அட்லீஸ்ட் குரூப் சுற்றை தாண்டினாலே அது மிகப்பெரிய சாதனை தான் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.