ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பை 2018 கால்பந்து தொடரில், நேற்று (ஜூன் 17) மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது. அந்தப் போட்டிகள் குறித்த குயிக் ரீகேப் இங்கே,
மாலை 5.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள கோஸ்டா ரிகா – செர்பியா அணிகள் மோதின.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செர்பியா தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் செர்பியாவின் கோலாரோவ் கோல் அடிக்க அந்த அணி 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கோஸ்டா ரிகா அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் 1-0 என செர்பியா வெற்றி பெற்றது.
கோஸ்டா ரிகாவிற்கு 5 கார்னர் வாய்ப்பும், செர்பியாவிற்கு 4 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு அணிகளும் ஆன்-டார்கெட் நோக்கி மூன்று முறை முயற்சி செய்தனர். ஆனால் செர்பியா ஒரு முயற்சியை கோலாக மாற்றியது. இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றது.
இரவு 08.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது போட்டியில், ‘F’ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி – மெக்சிகோ அணிகள் மோதின.
முதல் பாதி நேர ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பைக்கு முன்னர் கடைசியாக விளையாடிய ஐந்து நட்பு கால்பந்து போட்டியில் ஒன்றில் கூட ஜெர்மனி வெற்றிப் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 0-0, பிரான்ஸ் 2-2, ஸ்பெயின் 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பிரேசிலிடம் 1-0 எனவும், ஆஸ்திரியாவுடன் 2-1 என்றும் தோற்றுள்ளது. அந்த மோசமான ஃபார்ம் நேற்றைய ஆட்டத்திலும் எதிரொலித்தது.
இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினராலும் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.