உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் வெற்றிப் பெற்றுள்ளன.
Match #50 | #FRA 4-3 #ARG #FRAARG pic.twitter.com/h8iw5HD1sR
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 30, 2018
நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் களமிறங்கின.
லீக் போட்டிகளின் முடிவில், ‘A’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘B’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘C’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘D’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, E’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘F’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘G’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘H’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
‘F’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது லீக் சுற்றின் பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2006-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2010-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010-ம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014-ம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014-ம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ‘C’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.
பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார். இருப்பினும், பிரான்ஸின் நான்கு கோலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் இறுதிவரை கோல் அடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து இரவு 11.30 நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி மீண்டும் கோல் அடித்தார். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.
அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ. இவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காவே, இந்த உலகக் கோப்பையை பார்த்தவர்கள் அதிகம். இவர்கள் விளையாடும் அணியை ஆதரித்தவர்கள் அதிகம். ஆனால், இருவரது அணியும் ஒரே நாளில் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் அணிகள் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றால் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் தோல்வியடைந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதனால் இரு வீரர்களின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த உலகக்கோப்பை தான் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று வெற்றிப் பெற்ற பிரான்ஸ் - உருகுவே அணிகள் முதல் காலிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.