FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 26) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
இன்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு இரண்டு போட்டிகளும், இரவு 11.30 மணிக்கு இரண்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.
டென்மார்க் vs ஃபிரான்ஸ்:
'C' பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்குகின்றது. இரண்டு போட்டியில் ஆடியுள்ள டென்மார்க், ஒரு வெற்றி, ஒரு டிரா என C பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம், பிரான்ஸ் அணி ஆடியுள்ள இரு போட்டியிலும் வெற்றிப் பெற்று ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா vs பெரு:
'C 'பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு தோல்வி, ஒரு டிரா என புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெரு அணி, ஆடிய இரண்டு போட்டியிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.
நைஜீரியா vs அர்ஜென்டினா:
இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நைஜீரியாவும், அர்ஜென்டினா அணியும் மோதுகின்றன. D பிரிவில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பையில் தொடர வேண்டுமெனில், இப்போட்டியில் நிச்சயம் வெற்றிப் பெற்றாக வேண்டும். டிரா செய்தால் கூட, முதல் சுற்றில் இருந்தே வெளியேற நேரிடும்.
அதேசமயம், இரண்டு போட்டியில் ஆடியுள்ள நைஜீரியா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என மூன்று புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐஸ்லாந்து vs குரோஷியா:
D பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் குரோஷியா அணி, 2 போட்டியில் விளையாடி, இரண்டிலும் வெற்றிப் பெற்றுள்ளது. அதிலும், பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது. இதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் ஐஸ்லாந்து அணியை குரோஷியா வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.