FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 23) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பெல்ஜியம் vs துனீசியா
இன்று மாலை 05.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பெல்ஜியம் மற்றும் துனீசியா அணிகள் மோதுகின்றன. தனது முதல் போட்டியில் ஆடிய பெல்ஜியம், பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இருந்தது.
இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் களம் இறங்கியுள்ளது. பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்தவர்கள். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் என்றே கூறலாம்.
ப்ரீமியர் லீக் அணிகளுக்கு மேனேஜராக இருந்தபோது, சுமாரான பிளேயர்களையும் சிறந்த டெக்னிக்கல் வீரர்களாக மாற்றியவர் ராபர்டோ. பெல்ஜியம் அணியிடம் இதுவரை இல்லாத சிறந்த பெர்ஃபாமன்சை இவரது பயிற்சியின் கீழ் எதிர்பார்க்கலாம்.
பெரும்பாலான தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டாலும், கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருப்பதால், இம்முறை நிச்சயம் அதனை ருசித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. இதனால், நிச்சயம் இந்தப் போட்டியில் பெல்ஜியம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியா vs மெக்சிகோ
இரவு 08.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தென் கொரியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. தனது முதல் போட்டியில் சுவீடன் அணியுடன் மோதிய தென் கொரியா, 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
மெக்சிகோ அணியை பொறுத்தவரை ஆண்ட்ரஸ் கார்டாடோ, ஜேவியர் ஹெர்னான்டஸ், ரஃபேல் மார்க்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியின் முக்கிய பலமாக விளங்குகிறார்கள். இந்த உலகக் கோப்பைக்கு ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், மெக்சிகோ அணி வீரர்களுக்கு விருந்து நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது. அந்தப் விருந்தில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த அவப்பெயருடன் களமிறங்கிய மெக்சிகோ, தனது முதல் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அனைவரையும் வாயடைக்க வைத்தது. இதனால், இன்றைய போட்டியிலும் மெக்சிகோ தனது ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி vs சுவீடன்
இரவு 11.30 மணிக்கு தொடங்கும் பெரும்பாலான ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. முதல் போட்டியிலேயே மெக்சிகோவிடம் தோற்ற ஜெர்மனி, அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, சுவீடன் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. டிராவை நோக்கி செல்லாமல், கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது. அதேசமயம், முதல் போட்டியில் வெற்றியுடன் துவங்கியிருக்கும் பலம் வாய்ந்த சுவீடன், வெற்றிப்பயணத்தை கண்டினியூ செய்வதில் முனைப்பாக உள்ளது.
ஆனால், ஜெர்மனி அணி தற்போது சிறப்பான ஃபார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.