ஃபிபா உலகக் கோப்பை: 28 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து! கண்ணீருடன் வெளியேறிய ரஷ்யா!

ரஷ்யாவை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றி ரஷ்ய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார்

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. வரும் ஜூலை 15ம் தேதியோடு நிறைவடைகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – ஸ்வீடன் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கம் சுமாராகவே இருந்தது.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் ஸ்வீடன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.

இரண்டு கோல் அடித்தாலும் இங்கிலாந்து தடுப்பாட்டம் ஆட விரும்பவில்லை. தொடர்ந்த தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77-வது நிமிடத்தில் டேல் அலி மாற்றப்பட்டார். இருப்பினும், 90-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தத்தை கணக்கிட்டு கூடுதலாக 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்திலும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி இருந்தாலும், கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.

கடந்த 2014 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணி வெறும் ஒரேயொரு புள்ளியோடு லீக் சுற்றுடன் வெளியேறியது. தொடக்க போட்டியில் இத்தாலிக்கு எதிராக 2-1 என இங்கிலாந்து தோற்றது. இந்த வலியை இங்கிலாந்து ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை. ஆகையால், இந்த உலகக் கோப்பையில் எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என மிகத் தீவிரமாக உள்ளது இங்கிலாந்து அணி.

அதற்கேற்றார் போல், ஹேரி கேன் தலைமையிலான இளம் இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அடுத்ததாக, இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் ரஷ்யாவும், குரோஷியா அணிகளும் மோதின. உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கியது ரஷ்யா.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷ்ய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆந்த்ரேஜ் க்ரமாரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷ்யா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், இரண்டு அணிகளும் எவ்வளவோ முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷ்யா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட்டில், முதலில் ரஷ்ய வீரர் ஸ்மோலோவ் அடித்த பந்தை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணியின் ப்ரோசோவிக் முதல் வாய்ப்பில் கோல் அடித்தார்.

இதனால், 1-0 என குரோஷியா முன்னிலை பெற்றது.

இரண்டாவது வாய்ப்பில் ரஷ்ய வீரர் சாகோவ் கோல் அடித்தார். ஆனால் இம்முறை குரோஷியா வீரர் மேடோ கோவாசிக் அடித்த பந்தை ரஷ்யா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

இதனால் 1 – 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷ்யா வீணாக்கியது. ரஷ்ய வீரர் பெர்னாண்டஸ் அடித்த பந்தை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அதேசமயம், மூன்றாவது வாய்ப்பில் குரோஷியா வீரர் லூகா மோட்ரிக் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் 1-2 என குரோஷியா முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பில் ரஷ்ய வீரர் இக்னாசெவிச் கோல் அடித்தார். குரோஷிய வீரர் லிடாவும் கோல் அடித்ததால் 2-3 என குரோஷியா முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பில் ரஷ்ய வீரர் குசியேவ் கோல் அடித்ததால் 3-3 என ஆட்டம் சமனானது. ஆனால், குரோஷிய வீரர் இவான் ராகிடிக் மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என தனது அணியை வெற்றி பெற்ற வைத்து அரையிறுதிக்கு கொண்டுச் சென்றார். அதுமட்டுமின்றி, ரஷ்யாவை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றி ரஷ்ய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். சொந்த மண்ணில் உலகக் கோப்பை நடப்பதால், எப்படியும் தங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என ரஷ்ய ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், பெனால்டி ஷூட் அவுட்டில் தங்கள் அணி வெளியேறியதால், பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பொறுத்தவரை ஐரோப்பா, தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளே கோப்பையை மாறி மாறி வென்று வருகின்றன. இதுவரை 11 முறை ஐரோப்பிய நாடுகளும், 9 முறை தென்அமெரிக்க நாடுகளும் வெற்றி வாகை சூடியுள்ளன. இந்த முறை அரைஇறுதியை எட்டியுள்ள 4 அணிகளும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகளாகும். உலக கோப்பை வரலாற்றில் அரைஇறுதிக்கு 4 ஐரோப்பிய அணிகள் ஒருசேர வருவது இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1934, 1966, 1982, 2006-ம் ஆண்டுகளில் இவ்வாறு நடந்துள்ளது.

இந்த உலக கோப்பையில் தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பெரு ஆகிய 5 அணிகள் தகுதி பெற்றிருந்தது. இந்த அணிகளின் சவால் கால்இறுதியோடு முடிந்து போனது. ஐரோப்பாவில் நடத்தப்படும் உலக கோப்பை போட்டிகளில் தென்அமெரிக்க அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை வென்றதில்லை. பிரேசிலின் வெளியேற்றத்தின் மூலம் அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close