உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.
உருகுவேவுக்கு எதிராக இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. அதே நேரத்தில் உலகக் கோப்பையில் கடைசியாக 6 முறை காலிறுதிக்கு நுழைந்ததில், 5 முறை அரை இறுதிக்கு உருகுவே சென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் இது என்பதால், போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.
தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரீஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.
0-2 என பின்தங்கியதால் உருகுவே அணி கோல் அடிக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை. 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி விளையாடும் பட்சத்தில் போட்டியை காண ரஷ்யாவுக்கு வருவேன் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், உலக கோப்பை போட்டியை காண வரும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் முடிவை ரஷ்யா வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா சேம் சைட் கோல் அடிக்க, பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். என்ன நடக்கிறது என்று பிரேசில் சுதாரிப்பதற்குள் இரண்டாவது கோல் விழுந்தது. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். அதன்பின், ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தில் ஜொலிக்காதது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது.
பெரும்பாலான உலகக் கோப்பைத் தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டாலும், கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருப்பதால், இம்முறை நிச்சயம் அதனை ருசித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது பெல்ஜியம் அணி.