21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரை இறுதி ஆட்டம் இன்று (ஜூலை 10) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
கால்பந்து உலகில் பிரான்ஸை பொறுத்தவரை ‘தலைசிறந்த அணி’ எனும் பெயருக்கு அருகில் இருக்கும் அணி. உலகக் கோப்பையை பொறுத்த வரைக்கும் கூட அப்படியொரு பெயரையே பெறுகிறது பிரான்ஸ். இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது.
1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ்.
இந்நிலையில், பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி பார்வேர்ட்ஸ், மிட் ஃபீல்டர்ஸ், டிஃபென்டர்ஸ் என அனைத்திலும் சமபலத்துடன் உள்ளது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.
பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. உலகக் கோப்பையை பொறுத்தவரை இதுவரை சாம்பியன் ஆனதில்லை. 1986ல் நடந்த உலகக் கோப்பையில் 4வது இடம் பிடித்ததே, பெல்ஜியம் அணியின் ஆகச்சிறந்த செயல்பாடாகும். கடந்த 2014ம் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி, 6வது அணியாக தொடரை நிறைவு செய்தது பெல்ஜியம்.
இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி ஃபார்வேர்ட்ஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது. ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் என்றே கூறலாம்.
கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது தவிர மரோனே ஃபெலைனி, ஆக்சல் விட்ஸல், வின்சென்ட் கொம்பேணி, நேசர் சட்லி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மியூநிர் 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் விளையாட இயலாது.
இரு அணிகளும் இன்று மோதவிருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24ல், பெல்ஜியம் 30ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டிகள் டிராவாகியுள்ளது.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்ஸ் அணியே வென்றுள்ளது. 1938ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இன்றைய முதல் அரையிறுதிப் போட்டியில் விறுவிறுப்பிற்கும், அனலுக்கும் பஞ்சமே இருக்காது என்பது உறுதி!. இருப்பினும், பெரும்பாலான தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டாலும், கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருப்பதால், இம்முறை நிச்சயம் அதனை ருசித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது பெல்ஜியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.