FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 23) நடைபெற்ற போட்டிகள் குறித்த அலசல் இங்கே,
நேற்று மொத்தம் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ‘G’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் – துனீசியா அணிகள் மோதின.
பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமேலு லுகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனீசியா வீரர் டைலன் ப்ரோன் கோல் அடித்தார். இருப்பினும் பெல்ஜியம் அணி 2-1 என முன்னிலை வகித்தது. முதல் பாதிநேர ஆட்டம் முடியும் தருவாயில், பெல்ஜியம் விரர் ரொமேலு லுகாகு மீண்டும் ஒரு கோல் அடித்தார். துனீசியா வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும், பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.
அதன்பின் துனீசிய அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிச்சி பட்ஷுவாய் கோல் அடித்தார். இதனால், பெல்ஜியம் அணி 5-1 என்று முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் துனீசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுவது பெல்ஜியம் அணி. பல வல்லுனர்களின் சாய்ஸ் பெல்ஜியமாகவே உள்ளது. ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட அணிகளை விட, பெல்ஜியமுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல், பெல்ஜியம் அணியின் செயல்பாடு உள்ளது.
தனது முதல் போட்டியில் பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், நேற்றைய போட்டியில் 5-2 என பெரும் கோல் வித்தியாசத்தில் துனீசியா அணியை வீழ்த்தியுள்ளது. ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகுவின் மொத்த கோல்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரே உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த பெல்ஜியம் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, இரவு 08.30 மணிக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘F’ பிரிவில் இடம் பிடித்துள்ள மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.
முதல் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனி அணியை தோற்கடித்து இருந்ததால், மெக்சிகோ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் மெக்சிகோவின் கார்லஸ் வெலா, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 66-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஜேவியர் ஹெமாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரியா அணியின் சான் ஹியூங் மின் 93-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இருப்பினும், தென் கொரியா அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
இறுதியில், மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாகவே விளையாடின. தென் கொரியாவின் பல கோல் வாய்ப்புகளை மெக்சிகோ முறியடுத்தது. அதேபோல், சில மெக்சிகோவின் வாய்ப்புகளையும் தென் கொரியா முறியடித்தது. இந்த வெற்றியின் மூலம் F பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக மெக்சிகோ முன்னேறியுள்ளது.
இரவு 11.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், ‘F’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில், ஸ்வீடன் அணியின் ஒலா டொய்வோனன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குரூஸ் 95-வது நிமிடத்தில், யாரும் நம்ப முடியாத வகையில் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார்.
Tony Kross. Pure love. #WC2018 #Germany #Alemania #Goal #Screamer #GermanyvsSweden pic.twitter.com/NpsDTExx8U
— Hyped Football (@hypedXfootball) 23 June 2018
அதன்பின், எவ்வளவோ போராடியா ஸ்வீடனால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால், ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
முதல் போட்டியில் மெக்சிகோ அணியிடம் தோற்று இருந்ததால், நேற்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி அணி இருந்தது. இருப்பினும், ஸ்வீடன் முதல் கோல் அடித்து முன்னிலையில் இருந்தும், இறுதியில் 2-1 என நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்று உலக சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஜெர்மனி அணி.
Everyone watching the last minutes of the Germany vs Sweden #GERSWE pic.twitter.com/ydqwWlIMGl
— ???? (@Jcbresendiz) 23 June 2018