scorecardresearch

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை- ஜப்பான், செனகல், ரஷ்யா முன்னேற்றம்

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018 நேற்றைய போட்டிகளில் ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி பெற்றன.

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை- ஜப்பான், செனகல், ரஷ்யா முன்னேற்றம்
FIFA World Cup 2018: Japan, Senagal, Russia won the matches

ஆசைத்தம்பி

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018 நேற்றைய போட்டிகளில் ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி பெற்றன.

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு ஜப்பான் மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில், ஜப்பான் வீரர் அடித்த பந்து கொலம்பியாவின் கார்லஸ் சான்செஸ் மொரேனோ கையில் பட்டது. இதனால் உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஷின்ஜி கவாஜா கோல் அடித்தார். இதனால் 6-வது நிமிடத்திலேயே ஜப்பான் 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் கொலம்பியா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ ஃப்ரீ கிக் வாய்ப்பு பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா, தலையால் அற்புதமாக ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய அணி ஒன்று, தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை தோற்கடித்ததே கிடையாது. முதன்முறையாக கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் இந்த சாதனையை படைத்துள்ளது.

இரவு 08.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மீண்டும் செனகல் அணியின் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பதிலுக்கு, போலந்து அணியின் கிரிசோவியக், 86 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பிறகு போலந்து அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரவு 11.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ரஷ்யாவின் அகமது பதே 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து டெனிஸ் செரிதேவ் 59-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து, ரஷ்யாவின் அர்டெம் 62 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க அந்த அணி 3-0 என முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது சாலா ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், ரஷ்யா அணி எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

Stay updated with the latest news headlines and all the latest Fifa news download Indian Express Tamil App.

Web Title: Fifa world cup 2018 japan senagal russia won the matches