FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 26) நடைபெற்ற போட்டிகள் குறித்த அலசல் இங்கே! அதீத உற்சாகத்தில் மரடோனா கீழே விழுந்தார்.
FIFA World Cup 2018: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 'C' பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, இரண்டு போட்டியில் ஆடியிருந்த டென்மார்க், ஒரு வெற்றி, ஒரு டிரா என C பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. அதேசமயம், பிரான்ஸ் அணி ஆடியுள்ள இரு போட்டியிலும் வெற்றிப் பெற்று ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.
இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும், முதல் பாதியை போலவே இருந்தது. இதிலும் இரு அணியினரும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இறுதிவரை எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
‘சி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணியும் முதல் இரண்டு இடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.
சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பெரு அணியின் ஆன்ட்ரே காரில்லோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ தலையால் முட்டி கோல் போட முயன்றார். ஆனால், அது தடுக்கப்பட்டது. தொடர்ந்து, 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக் அடித்த பந்தை, கோல்கீப்பர் பெட்ரோ காலஸ் தடுத்தார். முதல் பாதியில் பெரு அணி 1-0 என முன்னிலை வகித்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் பெரு அணியின் பாவ்லோ குயரேரோ கோல் அடிக்க, பெரு அணி 2-0 என்ற முன்னிலையை அடைந்தது. 52-வது நிடத்தில் ஆஸ்திரேலியாவின் மைல் ஜெடினக் தலை யால் முட்டிய பந்து தடுக்கப்பட்டது. இதற்கு பிறகு, மூன்று முறை ஆஸ்திரேலிய அணி கோல் போட முயற்சித்தும் பலனில்லை. கடைசி வரை போராடியும் ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது.
முடிவில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறியது.
இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஐஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நடந்த தவறை இம்முறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மெஸ்ஸி, இம்முறை கோல் அடித்து அசத்தினார். இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் முதல் கோல் இதுவேயாகும். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
மேற்கொண்டு, முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இதனை உலகெங்கிலும் உள்ள அர்ஜெண்டினா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, கால்பந்து ஜாம்பவானான அர்ஜெண்டினாவின் மாரடோனா ஆட்டத்தை பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
14-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்தவுடன் மரடோனாவிடம் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நாற்காலியில் இருந்து எழுந்து துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன்பின் நைஜீரியா பதில் கோல் போட்டவுடன் மரடோனா தலை தொங்கிய படி சோகத்துடன் இருந்தார். அர்ஜெண்டினா வீரர்கள் கோல் கம்பத்துக்கு அருகே செல்லும்போதெல்லாம் கோல் அடிப்பார்கள் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல கோல் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்து அர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை அவர் முகத்தில் தெரிந்தது.
அந்த வேளையில் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா 2-வது கோலை போட்டது. இதனால் சோகத்தில் இருந்த மரடோனா மீண்டும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அப்போது நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தார்.
இதையடுத்து போட்டி முடிந்ததும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு லோ BP ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால், தற்போது அவர் நலமுடன் உள்ளார்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.