ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.
இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், கோஸ்டா ரிகா மற்றும் செர்பியா அணிகள் மோதுகின்றன.
இரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதுகின்றன.
ஜெர்மனி அணிக்கு மானுவல் நியுர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோச்சிம் லோ தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரிய அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடைசியாக விளையாடிய ஐந்து நட்பு கால்பந்து போட்டியில் ஒன்றில் கூட ஜெர்மனி வெற்றிப் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 0-0, பிரான்ஸ் 2-2, ஸ்பெயின் 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பிரேசிலிடம் 1-0 எனவும், ஆஸ்திரியாவுடன் 2-1 என்றும் தோற்றுள்ளது.
இரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்தும் மோதுகின்றன.
காயத்தால் அவதிப்பட்ட பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், உலகக் கோப்பையில் விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. 'நாளுக்கு நாள் நெய்மரின் வேகம் அதிகரித்து வருகிறது. அவரது வேகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிக் கொண்டே போகிறது என சக வீரர் டேனிலோ கூறியிருப்பது பிரேசில் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.