ஃபிபா உலகக் கோப்பை 2018: சுவாரஸ்யம், ஏமாற்றம் கலந்த நேற்றைய போட்டிகளின் முடிவுகள்!

36 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய பெரு அணி, அந்த மகிழ்ச்சியில் தனது வெற்றியை கோட்டை விட்டது

ஆசைத் தம்பி

ஃபிபா உலகக் கோப்பை தொடர் கடந்த 14ம் தேதி ரஷ்யாவில் கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதில், நேற்று(ஜூன் 16) மூன்றாம் நாள் ஆட்டத்தில் மொத்தமாக நான்கு போட்டிகள் நடந்தன. அவற்றின் முடிவுகள் குறித்து ஒரு குயிக் ரீகேப் இங்கே,

ஃபிரான்ஸ் vs ஆஸ்திரேலியா

நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஃபிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அண்டோனி கிரீஸ்மேன் 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, 1-0 என ஃபிரான்ஸ் முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் மைக் ஜெடினக் 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஃபிரான்ஸின் பவுல் போக்பா ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெற்றது.

அர்ஜென்டினா vs ஐஸ்லாந்து

மாலை 06.30 மணிக்கு நடைபெற்ற ‘டி’ பிரிவு ஆட்டத்தில், அர்ஜென்டினாவும், ஐஸ்லாந்து அணிகளும் மோதின. இதில், ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். அதை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள், 23-வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் ஆல்ஃபிரயோ ஃபின்பொகாசன் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தது. குறிப்பாக, இரண்டாம் பகுதியில், ஐஸ்லாந்து வீரர்கள், தாங்கள் கோல் அடிப்பதை காட்டிலும், மெஸ்ஸியை கோல் அடிக்க விடாமல், அவரை சுற்றிவளைத்து அவரது ஷாட் வியூகங்களை தவிடு பொடியாக்கினர்.

ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரு vs டென்மார்க்

இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற ‘சி பிரிவு ஆட்டத்தில், பெரு மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

மேற்கொண்டு, எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய பெரு அணி, அந்த மகிழ்ச்சியில் தனது வெற்றியை கோட்டை விட்டது.

நைஜீரியா vs குரோஷியா

நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள நைஜீரியா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில், முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோஷியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோஷியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோஷியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என வெற்றிப் பெற்றது.

Get all the Latest Tamil News and Tamil Sports News at Indian Express Tamil. You can also catch all the latest Fifa News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close