ஆசைத்தம்பி
FIFA world cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் கால் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த எளிதான பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.
இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஹேரி கேன் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் கொலம்பிய வீரர் எர்ரி மினா கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து, பெனால்டி ஷூட் முறைப்படி, இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவின் ரடேமல் ஃபால்கோ கோல் அடித்தார். இங்கிலாந்தின் முதல் வாய்ப்பில் ஹேரி கேன் கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் கொலம்பிய அணியின் ஜான் கோட்ராடோ கோல் அடித்தார். இங்கிலாந்து அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இரண்டாவது பெனால்டி கோல் அடித்தார்.
மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணியின் லூயிஸ் முரியல் கோல் அடித்தார். ஆனால், இங்கிலாந்தின் ஜோர்டன் ஹென்டர்சன் அடித்த மூன்றாவது கோல் வாய்ப்பை கொலம்பிய கோல் கீப்பர் தடுத்தார். இதனால், 3-2 என கொலம்பியா முன்னிலை பெற்றது.
நான்காவது வாய்ப்பில் கொலம்பிய வீரர் கார்லஸ் அடித்த வாய்ப்பு தடுக்கப்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்தின் கிரன் ட்ரிப்பர் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 3-3 என சமனிலை ஆனது.
இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா அடித்த கோல் தடுக்கப்பட, இங்கிலாந்தின் எரிக் டயர் கோல் அடிக்க 4-3 என்ற கணக்கில் த்ரில் வெற்றிப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.
FIFA world cup 2018: ஸ்வீடன் vs சுவிட்சர்லாந்து
நேற்று நடந்த மற்றொரு போட்டியில், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து 4 மாற்றங்களுடன் களம் இறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். 66–வது நிமிடத்தில், ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் கிக் செய்த பந்து, சுவிட்சர்லாந்து வீரர் மானுல் அகன்ஜி காலில் பட்டு சேம் சைட் கோலாக மாறியது. இதையடுத்து 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் முன்னிலை பெற்றது.
வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு 3 நிமிடம் எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்ட்டின் ஆல்சான் பந்துடன் கோல் பகுதிக்கு முன்னேறிய போது, அவரை சுவிட்சர்லாந்தின் மைக்கேல் லாங் தள்ளிவிட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக அவருக்கு சிவப்பு அட்டை காட்டி நடுவர் வெளியேற்றினார். தொடர்ந்து ஸ்வீடன் அணிக்கு பெனால்டிக்கு பதிலாக ஃபிரீ கிக் வழங்கினார். ஆனால், இந்த வாய்ப்பை ஸ்வீடன் வீணடித்தது.
முடிவில், 1–0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று, கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஸ்வீடன் காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.