கடந்த 14ம் தேதி தொடங்கிய ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று 'F' பிரிவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதின. இதில், முதல் பாதி நேர ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த முறை உலகக் கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. அதேசமயம், மெக்சிகோ ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், மெக்சிகோ அணியின் வெற்றிக்கு ஒரு பெண்மணியே காரணம் என்கிற பெயரில் வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படும் போது மெக்சிகோ வீரர்கள் அணிவகுத்து நிற்கையில், டிவியில் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக காண்பிக்கும் போது, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வீரர்கள் அனைவரையும் ஆசிர்வாதம் செய்து கொண்டே வருகிறார்.
இந்த வீடியோவை, பல மெக்சிகோ ரசிகர்கள் பலரும் பகிர்ந்து, தங்கள் அணியின் வெற்றிக்கு இந்த பெண்மணியே காரணம் என வேடிக்கையாக ட்வீட் செய்து வருகின்றனர்.