ஃபிபா உலகக் கோப்பை 2018: இன்றைய போட்டிகள்

ஆசிய கண்டத்தின் ஒரே நம்பிக்கையான ஜப்பான் இன்றைய போட்டியில் வென்றால் அது மிகப்பெரிய சரித்திரமாகும்.

ஆசைதம்பி:

உலக கோப்பை கால்பந்து போட்டியில், இன்று இரவு 07.30 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணியும், மெக்சிகோ அணியும் மோதுகின்றன.

லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்ட பிரேசில் அணி, அதன் பிறகு கோஸ்டாரிகா (2-0), செர்பியா (2-0) அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. நெய்மர், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் பிரேசிலின் தூண்கள் என்பதில் சந்தேகமில்லை. இதில் நெய்மர், காட்டினோ ஏற்கனவே தலா ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருப்பதால் இன்னொரு மஞ்சள் அட்டை வாங்கினால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்படும். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மிகுந்த கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெக்சிகோ லீக் சுற்றில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தது. தென்கொரியாவையும் (2-1) பதம் பார்த்த மெக்சிகோ கடைசி லீக்கில் சுவீடனுடன் (0-3) தோல்வியை தழுவியது. ஜெர்மனியை போன்று பிரேசிலின் கனவையும் சிதறடிக்கும் முனைப்புடன் மெக்சிகோ அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர். கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் மற்றும் மெக்சிகோ அணிக்காக சர்வதேச போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ள அனுபவம் வாய்ந்த ஜாவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றனர்.

இந்த உலகக் கோப்பைக்கு ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், மெக்சிகோ அணி வீரர்களுக்கு விருந்து நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் விருந்தில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், மெக்சிகோ அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த அவப்பெயரை துடைக்கும் அருமையான வாய்ப்பு மெக்சிகோ அணிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை அறுதியிட்டு கூறுவது மிகக் கடினம். ஆனால், மெக்சிகோவை விட பிரேசிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதே வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

இரவு 11.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், ஜப்பான் மற்றும் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம் அணி லீக் சுற்றில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை தோற்கடித்துள்ளது. லீக் சுற்றில் அதிக கோல்கள் (9) அடித்த அணி பெல்ஜியம் தான். காயத்தால் அவதிப்பட்ட ரோம்லு லுகாகு உடல்தகுதி பெற்று விட்டார். ஏற்கனவே 4 கோல்கள் அடித்துள்ள அவர் தனது கோல் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜப்பான் அணி லீக் சுற்றில் கொலம்பியாவை (2-1) தோற்கடித்து செனகலுடன் டிரா (2-2) செய்து கடைசி லீக்கில் போலந்துடன் (0-1) தோற்றது. ஜப்பானும், செனகலும் புள்ளி மற்றும் கோல் விகிதாசாரத்தில் சமநிலையில் இருந்தாலும் களத்தில் அதிகமான பவுல் செய்யாமல் ஒழுக்கமுடன் செயல்பட்ட வகையில் ஜப்பான் அடுத்த சுற்று அதிர்ஷ்டத்தை பெற்றது. 6-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் ஜப்பான் இதுவரை 2-வது சுற்றை தாண்டியது கிடையாது. பலம் வாய்ந்த பெல்ஜியத்தை ஜப்பான் வெல்வது கடினமே என்றாலும், குறிப்பிட்ட அந்த நாளில் சிறப்பாக ஆடும் அணிக்கே வெற்றி உறுதி! ஆசிய கண்டத்தின் ஒரே நம்பிக்கையான ஜப்பான் இன்றைய போட்டியில் வென்றால் அது மிகப்பெரிய சரித்திரமாகும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close