FIFA World Cup 2018: நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிய கண்டம், சாதிக்குமா ஜப்பான்?

இன்று(ஜூன் 24) நடைபெறவுள்ள போட்டிகள்

ஆசைத் தம்பி

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 24) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இங்கிலாந்து vs பனாமா

இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகள் மோதுகின்றன.

வோல்கோகிராட்டில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ததுனீசியாசியா அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்களை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர். இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களோ, தங்கள் பயிற்சிகளின் போது கால்பந்து விளையாடி ரிலாக்ஸ் செய்து கொள்ளும் சூழலில், சர்வதேச இங்கிலாந்து கால்பந்து அணியினர் கபடி விளையாடி தங்களை ரிலாக்ஸ் செய்கின்றனர்.

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்லாத வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. ஹேரி கேன் இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி நிச்சயம் சாதிக்கும் என தலைமை பயிற்சியாளர் கேரத் சவுத் கேட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அளித்துள்ள பேட்டியில், “இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், முதல் போட்டியில் பெற்ற வெற்றியை இன்றைய போட்டியில் கண்டினியூ செய்வதில் முனைப்போடு உள்ளது இங்கிலாந்து அணி.

ஜப்பான் vs செனகல்

இரவு 08.30 மணிக்கு ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா இதுவரை ஒரு போட்டியில் விளையாடி வெற்றிப் பெற்று, H பிரிவில் முதல் இரண்டு இடத்தில் உள்ளது.

ஜப்பான், அணி ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்று வல்லுனர்களால் கணிக்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் பலம் வாய்ந்த கொலம்பிய அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது.

ஷின்ஜி ககவா அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆவார். நடுகள வீரரான அவர் 89 சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர். இது தவிர மாயா யோஷிதா, ஒகாஸ்கி போன்ற முன்னணி வீரர்களும் ஜப்பான் அணியில் உள்ளனர். இவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இன்றைய போட்டியிலும் ஜப்பான் நிச்சயம் வெல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கண்டத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஜப்பான் அணி மட்டும் தான்.

செனகல் அணியைப் பொறுத்தவரை, சாடியோ மேன், கலிடோ கெளிபலி, டயஃப்ரா சாகோ ஆகியோர் செனகல் அணியின் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக, லிவர்பூல் அணிக்காக விளையாடியுள்ள சாடியோ மேனை நம்பியே செனகல் அணி உள்ளது.

2002ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய செனகல் அணியால், இம்முறையும் அதைப் போன்றதொரு impact ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

போலந்து vs கொலம்பியா

இரவு 11.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில், போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருப்பதால், நிச்சயம் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், குயின்டெரோ ஆகியோர் முன்னாள் சிறந்த வீரர்களான கார்லோஸ் வால்டர்ராமா, ஃபாஸ்டினோ அஸ்பிரில்லா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர்.

மிட்ஃபீல்டர்களாக ஏபெல் அகிலார், கார்லஸ் சாஞ்சஸ் அணிக்கு வலுச் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஸ்டிரைக்கர்களான லூயிஸ் முரியல், கோட்ராடோ, வில்மார் பரியோஸ், எட்வின் கார்டோனா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரேடமெல் ஃபல்காவோ இந்த சீசனில் பிரெஞ்ச் லீக்கில் மோனாக்கோ கிளப் அணிக்காக 18 கோல்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். டிபன்ஸில்கிறிஸ்டியன் சபாடா, டேவின்சன் சாஞ்சஸ், யேரி மினா ஆகியோரும் கைக்கோர்க்கும் பட்சத்தில் உறுதியாக கொலம்பியா அணியால் மிகப்பெரும் அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்து, இந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close