FIFA World Cup 2018: இன்று (ஜூன் 22) நடக்கவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஃபிபா உலகக் கோப்பை 2018: மாலை 5.30 தொடங்கும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியும், கோஸ்டா ரிகா அணியும் மோதுகின்றன.
தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய பிரேசில் 1-1 என போராடி டிரா செய்தது. இதுவரை பிரேசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை அன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து, பிரேசில் தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்விட்சர்லாந்து. அன்றைய ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. அவரை இறுதி வரை கோல் அடிக்க விடாமல், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
நிச்சயம் இன்றைய போட்டியிலும், நெய்மர் மீதே கோஸ்டா ரிகா குறி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. முடிந்தால், அவருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தலாம். ஏனெனில், ஏற்கனவே நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, குரோஷியாவிடம் 3-0 என தோல்வி அடைந்து, ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. குரோஷியாவிடம், அர்ஜென்டினா இப்படி மோசமாக தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை மனதில் வைத்து, கோஸ்டா ரிகாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் பிரேசில் அணி இன்று களமிறங்க உள்ளது.