ஆசைத்தம்பி
FIFA World Cup 2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 3 ஆட்டங்கள் நடக்கின்றன. மெஸ்ஸி இன்று தனது அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பாரா?
FIFA World Cup 2018 ரஷ்யாவின் நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில் இன்று (ஜூன் 21) மாலை 5.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் டென்மார்க் – ஆஸ்திரேலியா மோதுகின்றன.
தனது முதல் லீக் போட்டியில் ஃபிரான்ஸுடன் விளையாடிய ஆஸ்திரேலியா, 2-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. இதனால், இன்றைய டென்மார்க் அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிப் பெறும் என்பதை ‘ஜபியகா’ என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. ரஷ்யாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் இந்த ஆடு, இந்த போட்டி டிராவில் முடியும் என்று கணித்துள்ளது.
கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அடி வாங்கி வரும் ஆஸ்திரேலியா, இன்றைய வெற்றியின் மூலம் குறைந்தபட்சம் கால்பந்து ரசிகர்களையாவது திருப்திப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஃபிரான்ஸ் vs பெரு
இரவு 08.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஃபிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதுகின்றன. ஃபிரான்ஸ் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. பெரு அணியைப் பொறுத்தவரை, தனது முதல் போட்டியில் டென்மார்க் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனால், உலகக் கோப்பையில் நீடிக்க, கட்டாயம் இப்போட்டியில் அந்த அணி வென்றாக வேண்டும். ஆனால், பலம் வாய்ந்த ஃபிரான்ஸ் அணியை வீழ்த்துவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்பதும் அந்த அணிக்கு தெரிந்திருக்கும்.
அர்ஜென்டினா vs குரோஷியா
ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டி இது. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியிடம் 1-1 என டிரா வாங்கியது. மெஸ்ஸியை கார்னர் செய்து விளையாடிய ஐஸ்லாந்து அணி பாராட்டு மழையில் நனைய, இப்படி விளையாடினால் அர்ஜென்டினா நாடு திரும்ப முடியாது என அந்நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா எச்சரித்துள்ளார்.
குரோஷியாவை பொறுத்தவரை, தனது முதல் போட்டியில் நைஜீரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.