scorecardresearch

ஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா?

நேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா?

ஆசைத்தம்பி:

ரஷ்யாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணியும், குரோஷியா அணியும் மோதுகின்றன.

குரோஷிய அணி லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷ்யாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.

குரோஷியா அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது. 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மிட் ஃபீல்டில் குரோஷியா சிறந்து விளங்குகிறது. இரண்டு கோல்கள் அடித்துள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச் ஆகியோர் சிறந்த நடுகள வீரர்களாக உள்ளனர். அதேபோல், மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.

குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறுகையில், “கடந்த 6 நாட்களில் நாங்கள் அதிக ஆற்றலை செலவிட்டு விட்டோம். இரு ஆட்டங்களுக்காக மட்டும் 240 நிமிடங்கள் செலவழித்துள்ளோம். இது நிச்சயமாக ஒரு பிரச்சினையாக இருக்கும். எனினும் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் செய்வோம் மற்றும் இங்கிலாந்து அணியுடன் மோதுவதற்கான ஆற்றலை கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

குரோஷியா அணியின் ஸ்டிரைக்கரான மரியோ மன்ட்ஸூகிக் கூறுகையில், “இந்த தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்தோம். அது தற்போது மிக அருகில் உள்ளது. இலக்கை அடைவதற்காக எங்களது கடைசி சொட்டு வியர்வை களத்தில் சிந்தும் வரை போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, சர்வதேச கால்பந்து அரங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி இருந்தாலும், கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.

இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் ‘அனுபவமில்லாத அணி’ என்று இத்தொடருக்கு முன்பு அழைக்கப்பட்டாலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இங்கிலாந்து. லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். பயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்கள் மைண்டை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர்.

குரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.

அதேபோல், குரோஷியா பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறும்போது, “ஹாரி கேனை மதிக்கிறோம். இந்தத் தொடரில் அவர் 6 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோரை செயல்படவிடாமல் நாங்கள் தடுத்தோம். இதேபோல் ஹாரி கேனையும் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களிலும், குரோஷியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கடைசியாக இரு அணிகளும் 2009-ம் ஆண்டு தகுதி சுற்று ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது. இருப்பினும், இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

சரிசம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், நேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யார் வெல்வார்கள் என்பதை கணித்துக் கூறுவது கடினமாகவே உள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ரசிகர்கள் தமிழ் வர்ணனையுடன் சோனி இஎஸ்பிஎன் சேனலில் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Fifa news download Indian Express Tamil App.

Web Title: Fifa world cup 2018 will croatia beat england