ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பை தொடர் கடந்த 14ம் தேதி ரஷ்யாவில் கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதில், நேற்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மொத்தமாக மூன்று போட்டிகள் நடந்தன. அவற்றின் முடிவுகள் குறித்து ஒரு குயிக் ரீகேப் இங்கே,
ஸ்வீடன் vs தென் கொரியா:
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் கொரியா - ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த 1998-ம் ஆண்டிற்குப் பிறகு தென்கொரியா தொடக்க போட்டியில் தோல்வியை சந்தித்ததே கிடையாது. இந்த சாதனையை நீடிக்கும் நோக்கத்தோடு தென்கொரியா களம் இறங்கியது.
1958-ம் ஆண்டிற்குப் பிறகு ஸ்வீடன் அணி தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. இந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ஸ்வீடன் களம் இறங்கியது. முதல்பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. அருமையான வாய்ப்புகள் கிடைத்தும் ஸ்வீடன் அணி கோல் வாய்ப்புகளை தவற விட்டது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் ஆன்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் கோல் அடித்தார். அதற்கு தென்கொரியாவால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது.
பெல்ஜியம் vs பனாமா:
இரண்டாவது ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - பனாமா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s393-300x217.jpg)
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து, பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு 69 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் 3-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.
பனாமா அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இங்கிலாந்து vs துனீசியா:
மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/s394-300x217.jpg)
இதையடுத்து, துனீசிய வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனீசிய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி, அந்த அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். இதனால், இங்கிலாந்து அணி 2-1 என வெற்றிப் பெற்றது.
மேலும் படிக்க: உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்த ஒரு பெண்மணி தான் காரணமாம்!