FIFA World Cup 2018: பெரும் அவமானத்தை சந்தித்த அர்ஜென்டினா!

1962 உலகக் கோப்பைக்கு பிறகு, குரூப் சுற்றுப் போட்டிகளோடு அர்ஜென்டினா அணி வெளியேறியதே கிடையாது

ஆசைத் தம்பி

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 21) நடைபெற்ற போட்டிகள் குறித்த ஒரு குயிக் ரீகேப் இங்கே,

FIFA World Cup 2018: நேற்று மொத்தம் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ‘C’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா – டென்மார்க் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து, ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஃபெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஜெடினாக் கோல் அடிக்க, ஆஸ்திரேலியா 1-1 என ஆட்டத்தை சமன் செய்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

இப்போட்டியில், VAR தயவால் தான் ஆஸ்திரேலிய அணி டிரா செய்ய முடிந்தது. இல்லையெனில், நிச்சயம் தோற்று இருக்கும். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. கள நடுவர் VAR உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

முதன் முதலாக, இந்த உலகக் கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR – Video Assistant Referees) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறைப்படி மைதான நடுவர், களத்தில் நடக்கும் சம்பவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், டிவி நடுவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியும். கிட்டத்தட்ட, கிரிக்கெட்டில் Third Umpire போல.. இருப்பினும், இந்த புதிய முறையால் துல்லியமான முடிவை கொடுக்க முடியாது என பிஃபாவிற்கான நடுவர்களின் தலைவரே எச்சரித்து இருந்தார். ஆனால், இதுவரை மிகச் சரியாகவே இது ஒர்க் அவுட் ஆகிறது.

இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில், ‘C’ பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பேப் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை பெரு அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

பிரான்ஸ் முதல் கோலை அடித்த பிறகு, இரண்டாவது கோல் அடிப்பதற்காக பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதில் மிகச் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்களது டிஃபென்சை உடைத்து, பெரு அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இருப்பினும், அவ்வப்போது கிடைத்த சில வாய்ப்புகளையும் பெரு கோலாக மாற்ற தவறியது.

இரவு 11.30 மணிக்கு, ‘D’ பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆட்டம் தொடங்கியது. ஒரேயொரு காரணம் மெஸ்ஸி. ஐஸ்லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியில் டிராவானதால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த பின் அர்ஜென்டினா களமிறங்கியது. ஆனால், இப்படியொரு மிகப்பெரிய அவமானம் கிடைக்கும் என மெஸ்ஸி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை மண்டியிட வைத்து விட்டது குரோஷியா. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், தடுப்பாட்டம் + ஃபார்வேர்ட் என இரண்டிலும் ஆக்ரோஷம் காட்டியது குரோஷியா. ஆனால், அர்ஜென்டினாவோ, இவ்விரண்டிலும் சோடை போனது. குரோஷியா வீரர்கள் அடுத்தடுத்த இடைவேளையில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

குரோஷியா அணியின் அண்டி ரெபிக் 53-வது நிமிடத்திலும், லூக்கா மாட்ரிக் 80-வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

குரோஷியா வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு முன் அர்ஜென்டினா வீரர்ககளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரோஷியா அணி அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மெஸ்ஸியால் இறுதிவரை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த மெகா தோல்வியின் மூலம், ஏறக்குறைய உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைமைக்கு அர்ஜென்டினா வந்துவிட்டது. நைஜீரியாவுடன் மோத வேண்டிய போட்டி மட்டுமே இன்னும் அர்ஜென்டினாவுக்கு மீதமுள்ளது. அதில் வெற்றிப் பெற்றால் கூட, ஐஸ்லாந்து அணியின் மீதமுள்ள இரண்டு போட்டிகளின் முடிவை பொறுத்தே அந்த அணியின் தலையெழுத்து தீர்மானிக்கப்பட உள்ளது.

அப்படி ஒருவேளை அர்ஜெண்டினா வெளியேறினால், அது அந்த அணிக்கு மிகுந்த அவமானத்திற்குரிய விஷயமாகும். 1962 உலகக் கோப்பைக்கு பிறகு, குரூப் சுற்றுப் போட்டிகளோடு அர்ஜென்டினா அணி வெளியேறியதே கிடையாது. 56 ஆண்டுகால சாதனையை இழக்க நேரிடும், அதுவும் மெஸ்ஸி தலைமையில். இருப்பினும், பலம் வாய்ந்த அர்ஜென்டினா, குரோஷியாவிடம் இவ்வளவு அதிகமான கோல் வித்தியாசத்தில் தோற்று இருப்பது, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வரலாற்றில் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

அர்ஜென்டினாவின் நேற்றைய தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் அடைந்த வேதனையைவிட, இந்திய ரசிகர்கள் தான் அதிகம் துக்கம் கொண்டுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை, அர்ஜென்டினா, மெஸ்ஸி என ஹேஷ்டேகை தெறிக்கவிட்டவர்கள், தோல்விக்கு பிறகு, ஃபேஸ்புக் பக்கமே காலியாக இருக்கும் அளவிற்கு சத்தம் போடாமல் சோகத்தில் உள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close