FIFA World Cup 2018: ஃபெனால்டி வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ! மகிழ்ச்சியில் மெஸ்ஸி ரசிகர்கள்!

45 வயதில் உலகக்கோப்பையில் விளையாடிய ஒரே வீரர்

ஆசைத் தம்பி

FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 25) நடைபெற்ற போட்டிகள் குறித்த அலசல் இங்கே,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில், A பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் ரஷ்யா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவாரஸ் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் டெனி ஷெரிஷேவ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 90-வது நிமிடத்தில் உருகுவே அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடிக்க 3-0 என முன்னிலை பெற்றது. கூடுதலாக கிடைத்த 5 நிமிடங்களிலும் ரஷ்யா அணி கோல் அடிக்கவில்லை. இறுதியில், ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உருகுவே.

இவ்விரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிப் பெற்றுவிட்டதால், இந்தப் போட்டியின் முடிவால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், போட்டியை நடத்தும் ரஷ்யாவுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. உருகுவே பலம் வாய்ந்த அணி என்றாலும், 3 கோல்களை வாங்கிவிட்டு, ஒரு கோல் கூட திருப்பி அடிக்காமல் விட்டது தான் மேலும் சோகம். நாக் அவுட் சுற்றில், ரஷ்யாவிற்கு கடும் சோதனை காத்திருக்கிறது எனலாம்.

இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், எகிப்து மற்றும் சவுதி அரேபிய அணிகள் மோதின.

இரண்டு அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்துடன் விளையாடின. ஆட்டத்தின் 22 வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் சாலா இரண்டு தடுப்பாட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர்களை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் சவுதி அரேபிய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நேர்த்தியாக கோலாக்கி ஆட்டத்தை சமன்படுத்தினார் சல்மான் அல்-ஃபராஜ். ஆட்டம் நிறைவு பெறும் நேரத்தில் சவுதி அரேபிய வீரர் சலேம் அல்-தவ்சாரி கோல் அடித்து அசத்தினார். இதனால் 2-1 என சவுதி அணி ஆறுதல் வெற்றியை ருசித்தது.

சவுதி அரேபியாவின் பஹத் கோல் அடிக்க முயன்ற போது, அதனை எகிப்து கோல் கீப்பர் எஸ்ஸம் எல் ஹடாரி சிறப்பாக தடுத்தார். பெனால்டி தடுத்தது பெரிய விஷயம் இல்லை. நேற்றைய போட்டியில் களம் இறங்கியதன் மூலம், மிகவும் அதிக வயதில் அதாவது 45 வயதில் உலகக்கோப்பையில் விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் 1973-ம் ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 45 வயது 5 மாதம் ஆகிறது. எகிப்து அணிக்காக கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 155 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இரவு 11.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 45-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரிகார்டோ குவாரஸ்மா ஒரு கோல் அடித்தார்.

பின் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிடைத்த அருமையான ஃபெனால்டி வாய்ப்பை ரொனால்டோ வீணாக்கினார். ஐஸ்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெனால்டியை தவற விட, நேற்று ரொனால்டோ மீண்டும் அதே போன்றதொரு சொதப்பலை நிகழ்த்த, இந்த கணத்தில் உலகின் மகிழ்ச்சியான மனிதன் மெஸ்ஸி தான் என்று மீம்ஸ்கள் சமூக தளங்களை ஆக்கிரமித்துள்ளன. மெஸ்ஸியின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இரண்டாம் பகுதி நேரம் முடிந்த பிறகு, கூடுதலாக கிடைத்த நேரத்தை ஈரான் அணி பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கரிம் அன்சரிபர்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமநிலை அடைந்தது.

அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இருப்பினும், 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் மொராக்கோ வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இறுதியில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close