Advertisment

'பிரான்ஸ் அணி வென்றது கால்பந்துக்கே அவமானம்'! - பெல்ஜியம் கோல் கீப்பர் விளாசல்

எங்களை விட சிறந்த அணி வெற்றி பெற்றிருந்தால் கவலையில்லை...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பிரான்ஸ் அணி வென்றது கால்பந்துக்கே அவமானம்'! - பெல்ஜியம் கோல் கீப்பர் விளாசல்

கடந்த 10ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

Advertisment

இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. லீக் சுற்று முதல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆடியது பெல்ஜியம்.

அரையிறுதிக்கு முன்னர் இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றிப் பெற்று இருந்தது. அந்த அணி ஃபார்வேர்ட்ஸ் மிகவும் வலுவாக இருந்தது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்கினர். இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக இருந்தது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முதல் 20 நிமிடங்களுக்கு பெல்ஜியம் அணியே பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்திருந்தது. தங்கள் அணியின் டிபென்ஸ் சற்று பலவீனமானது என்பதை பெல்ஜியம் வீரர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால், தனது பலமான பார்வேர்ட்ஸ்-ஐ பயன்படுத்தி எப்படியாவது தொடக்கத்திலேயே கோல் அடித்துவிட வேண்டும் என்று பெல்ஜியம் வீரர்கள் முனைப்புடன் ஆடினர்.

முதல் பாதியில் 23வது நிமிடத்திற்கும் பிறகு பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது. பிரான்ஸ் வீரர்கள் பவார்ட், ஜிரவுட், கிரீஸ்மேன், எம்பாம்பே ஆகிய வீரர்கள் அதிகளவில் கோல் போஸ்ட்டை நெருங்கினர். குறிப்பாக, ஜிரவுட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை வீணடித்தார். இருப்பினும், முதல் பாத்தில் 0-0 என சமநிலையில் இருந்தது.

பிரேசிலுக்கு எதிராக சிறப்பாக ஆடி அசத்தி வெற்றிக்கு காரணமான பெல்ஜியத்தின் லுகாகுவின் ஆட்டம் அன்று ஒன்றுமேயில்லாமல் போனது. அவரை போட்டி முழுவதும் பெரும்பாலான நேரங்களில் பிரான்ஸின் ரஃபெல் வரனே, பெஞ்சமின் பவர்ட் ஆகியோர் அவரை சுற்றிவளைத்து அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.

இரண்டாம் பாதியில், 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாம்யூல் உம்டிடி தலையால் அடித்த கோல் வெற்றி கோலாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. பெல்ஜியம் 4-3-3 என்ற தாக்குதல் களவியூகத்தில் ஆடியது. ஹசார்ட், டிபுருய்ன் கார்னர்களை கவனிக்க லுகாகு முன்னிலையில் இருந்தார். ரைட் பேக் நிலையில் சால்டி, இடது பேக் நிலையில் வெட்ரோங்கென் இருந்தனர்.

இதற்கு பிறகு, பெல்ஜியம் வீரர்கள் தங்களது ஆட்டத்தை மேலும் வேகப்படுத்தினர். எவ்வளவோ முறை கோல் அடிக்க முயற்சித்தும், அதனை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். பெல்ஜியம் அணியின் அசுர வேக ஆட்டத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணி தனது டிபென்ட்சை இறுக்கியது. மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், கோல் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், பெல்ஜியம் அணியால் இறுதி வரை கோல் அடிக்கவே முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிப் பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ். இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் பெல்ஜியம் கோல் கீப்பர் திபவ்ட் கோர்டோய்ஸ் பிரான்ஸ் அணியை மிகக் கடுமையாக தாக்கி பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மிகவும் அருவருப்பான மேட்ச் இது. பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை, 11 வீரர்களையும் தடுப்பாட்டக்காரர்களாக களத்தில் நிறுத்தியது. கோல் போஸ்ட்டில் இருந்து 40 அடி தூரத்தில் 11 வீரர்களையும் நிறுத்தி வைத்துவிட்டது. இது தான் கால்பந்து ஆட்டமா?.

ஆனால், கைலியன் எம்பாப்பேவை வைத்து பிரான்ஸ் எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. பாப்வே மிகவும் விரைவானவர், இது அவர்கள் உரிமை. நாங்களும் மிகவும் உள்ளே சென்று விட்டோம். அங்குதான் எங்களுக்கும் பிரச்சினைகள் எழுந்தன. ஆனால், வெறுப்பு என்னவெனில், எங்களை விட சிறந்த அணி வெற்றி பெற்றிருந்தால் கவலையில்லை, ஒன்றுமே ஆடாத பிரான்ஸ், ஒன்றுமேயில்லாத பிரான்ஸ் வெற்றி பெற்றதுதான் வெறுப்பாக இருக்கிறது.

உருகுவேவுக்கு எதிராக காலிறுதியில் ஃப்ரீ கிக்கில் அதுவும் கோல் கீப்பிங் பிழையில் கோல் அடித்தது பிரான்ஸ். எங்களுகு எதிராக கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தது. பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்தாட்டத்துக்கு வெட்கக் கேடு, பிரான்ஸ் வெற்றி பெற்றதும் கால்பந்துக்கு வெட்கக்கேடு” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் திபவ்ட்.

பெல்ஜியம் கோல் கீப்பரின் இந்த விமர்சனம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், தாய்லாந்தில் சுற்றிலும் வெள்ள நீர் சூழ சேற்றிலும், சகதியிலும் நீரிலுமாக 18 நாட்கள் உணவின்றி நீரின்றி பரிதவித்து பலரது முயற்சியினால் மீட்கப்பட்ட இளம் சிறுவர்களுக்கு பெல்ஜியத்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி வெற்றியை சமர்ப்பிப்பதாக பிரான்ஸ் ஸ்டிரைக்கர் பவுல் போக்பா தெரிவித்துள்ளார். அந்த 12 சிறுவர்களும் கால்பந்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போக்பா, மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களின் படங்களை வெளியிட்டு, "வெற்றி, இந்த நாளின் நாயகர்களுக்குச் செல்கிறது, வெல் டன் பாய்ஸ், நீங்கள்தான் வலுவானவர்கள்" என்று சிறுவர்களின் மனவலிமையைப் பாராட்டியுள்ளார்.

இந்த 12 சிறுவர்களையும் ஃபிபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காண போக்பா ரஷ்யா அழைத்துள்ளார். ஆனால் இப்போதைக்கு அவர்கள் மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால், ரஷ்யா சென்று அவர்கள் போட்டியை நேரில் காண வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Fifa Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment