ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், குரோஷியா அணியும் மோதின. சரிசம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலேயே ஆதிக்கம் செலுத்தியது. ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மோட்ரிச், இங்கிலாந்து வீரரை தள்ளி விட்டதால், இங்கிலாந்திக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட, இங்கிலாந்து வீரர் ட்ரிப்பியர் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். இதனால், இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு கோல் கிடைத்தது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிப் போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக கோல் இதுவேயாகும்.
தொடர்ந்து, இங்கிலாந்து அணி ஆதிக்கம் காட்டியது. ஸ்டெர்லிங் மற்றும் ஹேரி கேன் மிக ஆக்ரோஷமாக விளையாடினார். குறிப்பாக, ஸ்டெர்லிங் அதி வேகமாக ரன்னிங் கொடுத்தார். அவரது வேகத்திற்கு மற்ற இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர் இன்னும் சற்று தனது வேகத்தை குறைத்தால் கோல் அடிக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு வேகமாக ஓடினார்.
ஆட்டத்தில் 28வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் மிக மிக எளிதான கோல் வாய்ப்பை மிஸ் செய்தார். கோல் போஸ்ட்டிற்கு வெகு அருகில் நின்ற கேன், பந்தை கோல் அடிக்க முயன்ற போது, அதனை குரோஷியா கோல் கீப்பர் தடுக்க, அவர் கையில் இருந்து தவறிய பந்து, மீண்டும் கேன் காலடிக்கு வர, மீண்டும் அவர் அடித்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார்.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் குரோஷியா அடித்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். குரோஷியாவின் முதல் கோல் அப்போதே கிடைத்திருக்க வேண்டியது. ஆனால், வாய்ப்பு தவறவிடப்பட்டது.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில், இங்கிலாந்து வீரர்களின் அருமையான பாஸ்-க்கு பிறகு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அந்த அணியின் லிங்கார்ட் தவற விட்டார், அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் வலது பக்கம் வெளியே சென்றது.
முதல் 37 நிமிடத்தில் கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு இங்கிலாந்து தான் பந்தை தங்கள் பக்கம் வைத்திருந்தது. அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது.
சில நேரங்களில் குரோஷியாவின் 'மேன் ஆஃப் தி பிக்சர்' மோட்ரிச் எங்கு சென்றார் என்று கூட தெரியவில்லை. குரோஷியாவின் தாக்குதல் ஆட்டத்தில் சிறிது தொய்வு முதல் பாதியில் காணப்பட்டது. இதனால், இங்கிலாந்து அணி சற்று கம்ஃபர்டபில் ஆக விளையாடுவது போல் தெரிந்தது.
தொடர்ந்து, ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் வெர்சால்ஜ்கோவிற்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. லாங்கில் இருந்து அவர் அடித்தாலும், கொஞ்சம் பொறுமையாக நிதானமாக கையாண்டிருந்தால் அந்த பந்தை கோலாக மாற்றி இருக்கலாம். ஆனால், அவர் ஆக்ரோஷமாக அடிக்க, பந்து கோல் கம்பத்திற்கு மேலே பறந்து சென்றது.
முதல் பாதியில் கூடுதலாக ஒரு நிமிடம் கொடுக்கப்பட்டது.
முதன் பாதியில் முடிவில், இங்கிலாந்து அணியே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியது. பலமுறை கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டனர். சில கோல்கள் தவறினாலும், ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து தான். குரோஷியா அணி 2-3 முறை மட்டுமே கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்றது. ஆனால், அவையும் தடுக்கப்பட்டது.
இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர் மோட்ரிச்சை டார்கெட் செய்தே இங்கிலாந்து அதிகம் விளையாடியது. இருப்பினும், முதல் பாதியை ஒப்பிடுகையில், இரண்டாம் பாதி தொடக்கத்தில் குரோஷியா தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
52-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வாக்கருக்கு மஞ்சள் ஆட்டை காண்பிக்கப்பட்டது.
அதன் பிறகு என்னவொரு ஆச்சர்யம்!...குரோஷியா கடுமையான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. முதல் பாதியில் ஆடிய வேகத்தை காட்டிலும் இரண்டு மடங்கு வேகமாக குரோஷியா ஆடியது. ஆனால், இங்கிலாந்தின் சிறப்பான டிபன்ஸ் காரணமாக, சில கோல்கள் தடுக்கப்பட்டன.
60வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு கோல் அடிக்க ஒரு நல்ல ஸ்பேஸ் கிடைத்தது. நீண்ட நேரமாக அப்படி ஒரு ஸ்பேஸ் குரோஷியாவிற்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் டிபன்ஸ் அப்படி இருந்தது. இருப்பினும், குரோஷியாவால் அதை கோலாக்க முடியவில்லை.
குரோஷியாவின் மோட்ரிச் சுத்தமாக இன்று ஆஃப் கலரில் இருந்தார். இந்த உலகக் கோப்பையில் மூன்று ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரு சாம்பியன், நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் காணாமல் போனார்.
இருப்பினும், எப்போது வேண்டுமானால் குரோஷியா தனது கோலை அடிக்கலாம் என்பது போல் இருந்தது குரோஷியாவின் ஆட்டம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, குரோஷியாவின் பெரிசிச் அற்புதமாக கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை ஆனது. இங்கிலாந்து வீரர் வாக்கரின் தலைக்கு மேல் சென்ற பந்தை எகிறி தனது காலால் கோல் அடித்து அசத்தினார் பெரிசிச்.
இதைத் தொடர்ந்து 71வது நிமிடத்தில் மீண்டும் குரோஷியாவிற்கு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்தின் டிபன்சை உடைத்து குரோஷியா முன்னேறியது. குரோஷியாவின் பெரிசிச் அடித்த பந்து, கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றதால், நூலிழையில் குரோஷியாவின் இரண்டாவது கோல் மிஸ் ஆனது. இங்கிலாந்து வீரர்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரிவதற்குள், இந்த சம்பவம் நடந்து முடிந்தது.
வழக்கமான் இரண்டாம் பாதி ஆட்டம் முடிந்தவுடன் 3 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில், இங்கிலாந்திற்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்திற்கு முதல் கோல் அடித்த ட்ரிப்பியரே பந்தை கிக் செய்தார். ஆனால், அதனை கோலாக மாற்ற முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது. 30 நிமிடங்கள் கொண்டது இந்த எக்ஸ்டிரா டைம். இந்த எக்ஸ்டிரா டைமின் 98வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் ஷார்ட்டில் அடிக்கப்பட்ட பந்தை, இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ் தலையால் திருப்பி கோலாக்க முயன்றார். பந்தும் கோல் கீப்பரிடம் சிக்காமல் இடது பக்கம் ஒதுங்கி கோலை நோக்கி சென்றது. ஆனால், குரோஷிய வீரர் வெர்சால்ஜ்கோ அந்த பந்தை அற்புதமாக தடுத்து வெளியேற்றினார். ஏறக்குறைய அது கோல் என்று அனைவரும் நினைக்க, கண் இமைக்கும் நொடியில் அது தடுக்கப்பட்டது.
பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தில், எக்ஸ்டிரா டைமின் இரண்டாம் பாதியில் குரோஷியாவின் மன்ட்சுகிச், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோல் அடிக்க குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.
அதன்பிறகு, மீதமிருந்த சில நிமிடங்களில் குரோஷிய வீரர்கள் நேரம் கடத்தலில் ஈடுபட, இங்கிலாந்தால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா. அதேசமயம், இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து.
வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.