1980ல் மாஸ்கோ ஒலிம்பிக் தொடரில் நடந்தது என்ன? இளம் பெண்கள் ‘Single Mother’ ஆனது எப்படி?

ரஷ்ய பெண்கள், அப்போது தான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்

ஆசைத் தம்பி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று ரஷ்யாவில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்துடன், பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

இதில், முதல் போட்டியில் ரஷ்ய அணி, 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை அபாரமாக வீழ்த்தியது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ரஷ்யாவில் கருவுறுதல் விகிதம் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும். இது 1.3 ஆகும், அதாவது சராசரியாக, ஒரு ரஷ்ய பெண் தன் வாழ்நாளில் ஒரே ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் என புள்ளிவிவரம் கூறுகிறது. 143 மில்லியன் மக்கள் தொகையில் இருந்து 2050 ஆம் ஆண்டு 154 மில்லியனாக அதிகரிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் கூறுகிறார். மக்கள் தொகையை அதிகரிக்காவிட்டால் ரஷ்யா காலியான இடமாக மாறிவிடும் என புடின் கவலையை வெளியிட்டுள்ளார்.

உலகில் சமீபத்தில் புள்ளிவிவரங்களின்படி 70.1 சதவீதம் மக்கள் வெறும் 20 நாடுகளின்தான் இருக்கின்றனர். அதிலும் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில் 18.5 சதவீதமும், இந்தியாவில் 17.9 சதவீதம் மக்களும் வசிக்கின்றனர். அதாவது 36.4 சதவீத மக்கள் இந்த 2 நாடுகளில் மட்டும் வசிக்கின்றனர். சீனா, இந்தியாவிற்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும், பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கும் அமெரிக்காவில் 4.3 சதவீதம் பேர் தான் உள்ளனர்.

சீனாவை விட பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் ரஷ்யாவில் 1.9 சதவீத மக்கள்தான் வாழ்கின்றனர். இந்த 20 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ள தாய்லாந்தின் மக்கள் தொகை 0.9 சதவீதம் மட்டுமே. அதனால் எஞ்சியுள்ள 213 நாடுகளில் உள்ள மக்கள் தொகை 29.8 சதவீதம் தான். முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளில் ஜெர்மன், ரஷ்யாவை தவிர இதர ஐரோப்பிய நாடுகள் வேறு எதுவுமில்லை.

மேலும் வட அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா, மெக்சிகோவும் , தென் அமெரிக்க நாடுகளில் பெரிய நிலப்பரப்பை கொண்ட பிரேசில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மற்றவை அனைத்தும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள்தான். அதிலும் இந்திய ஒன்றியம், பாகிஸ்தான், பிறகு வங்காளதேசம் என்று இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் மக்கள் தொகை பெருக்கத்தில் சீனாவை எப்போதே மிஞ்சியிருப்போம்.

என்ன இது… உலகக் கோப்பைக்கு தொடர்பே இல்லாத விவரங்களை ஏன் இவ்வளவு லெந்த்தா சொல்கிறோம் என யோசிக்கிறீர்களா?  எல்லாம் ஒரு காரணமாகத் தான். உலகக் கோப்பையை வேடிக்கை பார்க்க வரும் வெளிநாட்டு ஆண்களுடன், ரஷ்ய பெண்கள் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என ரஷ்யா கூறியிருப்பதே உலகக் கோப்பையையும், மக்கள் தொகையையும் நாம் தொடர்புப்படுத்தி பேசுவதன் காரணமாகும்.

அதாவது, ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, ஏராளமான ரஷ்யப் பெண்கள் போட்டியை என்ஜாய் பண்ண வந்த வெளிநாட்டவர்களிடம் காதலில் விழுந்தனர். ரஷ்ய பெண்களை எளிதில் கவர்ந்து விட முடியும் என்ற நம்பிக்கையில், பல வெளிநாட்டவர்கள், ரஷ்ய பெண்களை, ஒலிம்பிக் தொடர் முடியும் வரை காதல் எனும் பெயரில் தங்கள் பிடியில் வைத்திருந்தனர், இதனால் ரஷ்ய பெண்களில் பலர் கர்ப்பம் அடைந்தனர். ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் வெளிநாட்டு ரசிகர்கள், தங்கள் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். காதல், காதலர் என பெரிதும் நம்பியிருந்த ரஷ்ய பெண்கள், அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். ஆனால், அவர்கள் தவறை உணர்ந்த போது, நேரம் கையை மீறி சென்றுவிட்டது. ரஷ்ய பெண்கள் ‘சிங்கிள் மதர்’ நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் போலவே பிரம்மாண்டமான உலகக் கோப்பை கால்பந்து தொடர் முதன்முறையாக ரஷ்யாவில் நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியாவது ஒரு நகரத்தில் நடைபெறும்.போட்டிகளின் எண்ணிக்கையும் மிக குறைவு. ஆனால், உலகக் கோப்பை கால்பந்து போட்டி 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. பல நாட்டு ரசிகர்களும் பல நகரங்களை முற்றுகையிடுவார்கள். அமெரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனினும், உலகக் கோப்பை தொடரை காண 88,000 அமெரிக்க ரசிகர்கள் ரஷ்யா செல்கின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய கீழ் அவை பெண் எம்.பியும் கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்ன்யோவா, ‘ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மாஸ்கோ ரேடியோ நிலையம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , “1980 ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்னர், பல ரஷ்ய இளம் பெண்களுக்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா, லத்வியா, ஆசிய இன கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. இதில் பல குழந்தைகள் கைவிடப்பட்டன. இதனால், அந்த குழந்தைகள்தான் பாதிப்புக்கு உள்ளாகினர். பல சிங்கிள் மதர் உருவானார்கள். அவர்களும் கஷ்டப்பட்டு, அந்த பிஞ்சு குழந்தைகளையும் சிரமத்திற்கு ஆளாக்கினர். எனவே, இம்முறை ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. வெளிநாட்டவர்களுடன் தங்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார்.

இருப்பினும், சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புடின், ‘உலகக் கோப்பை வாயிலாக ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த டமாரா ‘கலப்பின குழந்தைகள் பிறக்க வேண்டாம். நம் இன குழந்தைகள் பிறப்பதுதான் ரஷ்யாவுக்கு நல்லது’ என்று பதில் அளித்தார்.

ரஷ்ய அதிபரோ, உலகக் கோப்பையை பயன்படுத்தி, மக்கள் தொகையை அதிகரிக்க திட்டம் போட, பெண் எம்.பியோ, நம் ஆண்களை தவிர வேறு எந்த ஆணிடமும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Get the latest Tamil news and Fifa news here. You can also read all the Fifa news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Russian women told to refuse sex to foreigners during world cup

Next Story
FIFA World Cup 2018: மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா கொலம்பியா? ஒரு பார்வை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express