காலையில் அவசரமாக சமைக்க வேண்டும், அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மசாலா அவல் ஒரு சிறந்த தேர்வாகும். வெறும் 10 நிமிடத்தில் மசாலா அவல் எப்படி செய்வது என்று ஃபூடி தமிழா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கூட இது பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
அவல் (தடித்தது) - 1 கப்
வெங்காயம் (நறுக்கியது) - 1 சிறியது
கேரட் (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 (காரத்திற்கு ஏற்ப)
கறிவேப்பிலை - சிறிதளவு
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கொத்தமல்லி இலை (நறுக்கியது) - சிறிதளவு (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில், அவலை ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரில் அலசி உடனே எடுத்து விடவும். தண்ணீர் அதிகமாக நிற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது அவலை மிருதுவாக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அலசி வைத்துள்ள அவலை சேர்த்து மெதுவாகக் கிளறவும். அவல் உடையாமல் பார்த்துக்கொள்ளவும். மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
இறுதியாக, வறுத்த வேர்க்கடலை, எலுமிச்சை சாறு (சேர்ப்பதென்றால்) மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது சூடான, சுவையான மற்றும் ஆரோக்கியமான மசாலா அவல் தயார்.