இந்தியா முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் பல விதமான உணவு வகைகள் இருந்தாலும், பிரியாணி அனைவருக்குமான விருப்ப உணவாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆம்பூர், திண்டுக்கல் பிரியாணி, கேரளாவில் தலச்சேரி பிரியாணி, தெலுங்கானாவில் ஹைதராபாத் பிரியாணி என ஏரியாவுக்கு ஏரியா பிரியாணியின் பெயரும் டேஸ்டும் மாறி வருகிறது.
தமிழ்நாட்டில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, பீஃப் பிரியாணி என அனைத்து விதமான பிரியாணிகளுக்கும் தனி ரசிகர்கள் உண்டு.
அசைவம் போலவே சைவத்திலும் வெஜ்பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி என பலவகைகள் இருக்கின்றன. பிரியாணியின் வியாபாரத்தால் தமிழ்நாட்டில் அதன் சந்தைமதிப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.
பிரியாணி என்பதை உணவு வகையாக மட்டும் கருதாமல் அதனை தமிழ்நாடு கொண்டாடியும் வருகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பிரியாணி விற்பனை சூடுபிடிக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பிரியாணி விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரியாணிக்கு என்று பிரத்யேகமாக பெரிய பிராண்டட் பெயர்களுடன் இயங்கும் உணவகங்களின் சந்தை 2,500 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. நடுத்தர உணவகங்கள், சாலையோர கடைகள் என விற்கப்படும் பிரியாணிக்கான சந்தைமதிப்பு 7,500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பிரியாணி விற்பனையில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக சென்னையில் தான் விற்பனையாகி உள்ளது. சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமார் 1000 கிலோவிற்கும் மேல் பிரியாணி வகைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மொத்த வர்த்தகத்தில் இப்பகுதியில் மட்டும் 50 சதவிகித பிரியாணி விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஆன்லைன் மூலமாக நேரடியாக என பல வகைகளிலும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பிரியாணி விற்பனை நடைபெற்று இருப்பது பிரியாணி பிரியர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“