நடிகர் கஞ்சா கருப்பு பரிந்துரைக்கும் இந்தச் சிறப்பு பீட்ரூட், கத்திரிக்காய் சுக்கா, சிக்கன் சுக்காவுக்கே டஃப் கொடுக்கும் சுவையில் இருக்கும். சாதத்துடன் அப்பளத்துடன் கலந்து சாப்பிடும்போது இதன் தனித்துவமான சுவை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். சப்பாத்திக்கும் இது ஒரு அற்புதமான சைட் டிஷ். இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கறியை எப்படி செய்வது என்று சாய்மணிவிவேக் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்
பீட்ரூட்
எண்ணெய்
பிரியாணி மசாலாப் பொருட்கள்
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
கறிவேப்பிலை
மஞ்சள்தூள்
உப்பு
கறி மசால் தூள்
மிளகாய்
சோம்பு
கசகசா
அன்னாசிப்பூ
பட்டை
லவங்கம்
தேங்காய்
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் மிளகாய், சோம்பு, கசகசா, அன்னாசிப்பூ, பட்டை, லவங்கம், மற்றும் தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, நன்கு மையாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், பிரியாணி மசாலாப் பொருட்கள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், நறுக்கிய பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
காய்கறிகள் மென்மையாகும் வரை வேக வேண்டும். காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்த மசாலா விழுது, கொஞ்சமாக கறி மசால் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான கத்திரிக்காய் மற்றும் பீட்ரூட் சுக்கா தயார்.