காலையில் அவசரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றாலோ அல்லது ஒரு வித்தியாசமான சைடு டிஷ் தேவை என்றாலோ, முட்டை புர்ஜி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது சுலபமாகவும், விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு உணவு. சாய் மணிவிவேக் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை தாரிணி கூறியிருப்பது போல சுவையான முட்டை புர்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய்
வெங்காயம்
தக்காளி
மிளகாய் தூள்
உப்பு
மஞ்சள் தூள்
முட்டைகள்
மிளகுத்தூள்
பச்சை மிளகாய்கள்
கொத்தமல்லி இலைகள்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு சமையல் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
தக்காளி வதங்கிய பிறகு, மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்கவும். இப்போது, முட்டைகளை உடைத்து நேரடியாகக் கடாயில் ஊற்றவும்.
முட்டைகள் சற்றுக் கெட்டியாகத் தொடங்கியதும், கரண்டியால் மெதுவாகக் கிளறி, முட்டை கலவையை உதிரியாக வரும் வரை சமைக்கவும். இறுதியாக, மிளகுத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இப்போது உங்கள் சுவையான முட்டை புர்ஜி தயாராக உள்ளது. இதை நீங்கள் ரொட்டி, சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.