காரம், புளிப்பு, உப்பு மற்றும் கருவாட்டின் தனித்துவமான சுவை என அனைத்தும் சேர்ந்த இந்தத் தொக்கு, நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. ஒரு காலத்தில், மீன் கிடைப்பது அரிதான மழைக்காலங்களில் அல்லது மீன்பிடிப்பு இல்லாத காலங்களில், புரதச் சத்துக்காக நெத்திலி போன்ற மீன்களைக் காயவைத்து கருவாடாக்கி பாதுகாத்து வந்தனர்.
ஆனால், இன்று அது ஒரு அரிய சுவையாகவும், நம் சொந்த ஊர் நினைவுகளைத் தூண்டும் உணவாகவும் மாறிவிட்டது. அந்த வகையில் நெத்திலி கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு: 1 கப்
வெந்நீர்: 2 கப்
நல்லெண்ணெய்: 4 தேக்கரண்டி
கடுகு: 1 தேக்கரண்டி
வெந்தயம்: 1/2 தேக்கரண்டி
பூண்டு: 8 பல் (நறுக்கியது)
சின்ன வெங்காயம்: 6 (நறுக்கியது)
பெரிய வெங்காயம்: 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை: ஒரு கொத்து
தக்காளி: 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள்: 2 தேக்கரண்டி
மல்லித்தூள்: 1/2 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
புளி: நெல்லிக்காய் அளவு
தண்ணீர்: 1/2 கப்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் 1 கப் சுத்தம் செய்த நெத்திலி கருவாடைப் போட்டு, அதில் 2 கப் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். பிறகு, கருவாடை இரண்டு முறை நன்கு அலசி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து, ஒரு கடாயில் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், 1 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெந்தயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
இப்போது, நறுக்கிய 8 பல் பூண்டு, 6 சின்ன வெங்காயம் மற்றும் 2 பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வதக்கவும். பிறகு, நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து, தக்காளி குழைய வதங்கும் வரை 5 நிமிடம் சமைக்கவும்.
இப்போது, 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதன் சாற்றை எடுத்து வடிகட்டவும். அந்த புளித் தண்ணீரை கடாயில் ஊற்றி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், கடாயை மூடி 5 நிமிடம் சமைக்கவும்.
இறுதியாக, சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி கருவாடை கடாயில் சேர்த்து, மூடிபோட்டு மிதமான தீயில் 10 நிமிடம் சமைக்கவும். எண்ணெய் தொக்கின் மேல் மிதந்து வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சுவையான நெத்திலி கருவாட்டுத் தொக்கு தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.