கடலை மாவு கொண்டு அடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இது உடல் எடையை குறைப்பதற்கும், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சிறந்த உணவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
தக்காளி – 1
கேரட் – 1
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
ஓமம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
செய்முறை
முதலில் தக்காளி, கேரட், சின்ன வெங்காயத்தை ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டை துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை பொடித்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுது, துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய் தூள், ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.
அடை மாவு கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கையால் நன்றாக பிசைந்து அடை மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, அடுப்பில் தோசைக் கல் சூடானதும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கடலை மாவு அடை தயார். தேங்காய் சட்னி கொண்டு சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“