ஆந்திரா, தெலங்கானா என்றால் முதலில் நினைவில் வருவது அம்மாநிலங்களின் காரசார உணவு தான். தோசைக்கு சட்னி தொடங்கி சிக்கன் வரை காரசார உணவு தான் சமைப்பார்கள். அங்கு சாப்பிடுவது நமக்கு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு உணவு வகைகள் பேமஸாக இருக்கும். அந்த வகையில் ஆந்திரா, தெலங்கானாவில் கோங்குரா அதிகம் விரும்புவார்கள். கோங்குராவில் பல வகை ரெசிபிகள் செய்யலாம். இங்கு கோங்குரா தொக்கு செய்வது குறித்து பார்ப்போம். கோங்குரா என்பது நம் ஊர்களில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
புளிச்சகீரை - 2 கட்டு
புளி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 25 கிராம்
கடுகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
செய்முறை
முதலில் புளிச்ச கீரையை நன்கு கழுவவும். அடுத்ததாக அதன் ஈரத்தை துடைத்து கீரையை பொடியாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். கரைசலுக்கு தேவையான புளியை சுடுநீரில் போட்டு ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் புளித் தண்ணீர், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கீரையில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். கிளறி விடவும். அவ்வளவு தான் சுவையான கோங்குரா தொக்கு ரெடி. ஆந்திராவில் பல வகைகளில் இந்த தொக்கு செய்யப்படும்.