பச்சரிசியுடன் சரி பாதி புழுங்கல் அரிசி: சாஃப்ட் ஆப்பத்திற்கு செஃப் தீனா ரெசிபி
செஃப் தீனா கைவண்ணத்தில், அவர் கொடுத்திருக்கும் சிம்பிள் டிப்ஸ்களை பயன்படுத்தி எப்படி சூடான மற்றும் சுவையான ஆப்பம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
நாம் அடிக்கடி சாப்பிடும் உணவாக இட்லி, தோசை இருக்கிறது. இவற்றுக்கு மாற்றாக நாம் பல வகை உணவுகளை முயற்சி செய்து பார்த்திருப்போம். அந்த வகையில், நாம் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய காலை உணவு என்றால், அது ஆப்பம் தான்.
Advertisment
ஆப்பம் பஞ்சுபோன்றும், லேசாகவும் இருப்பதால், சாப்பிடுவதற்கு மென்மையாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருக்கிறது. இவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசிக்கலாம். குறிப்பாக, சூடான ஆப்பத்துடன் தேங்காய் பால் சேர்த்து ருசிக்கலாம். அவ்வகையில், செஃப் தீனா கைவண்ணத்தில், அவர் கொடுத்திருக்கும் சிம்பிள் டிப்ஸ்களை பயன்படுத்தி எப்படி சூடான மற்றும் சுவையான ஆப்பம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 400 கிராம் பச்சரிசி - 400 கிராம் உளுந்து - 100 கிராம் வெந்தயம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் - பால் தயார் செய்ய தேவையான அளவு சர்க்கரை - 1 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவிய பிறகு, சுமார் 6 மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஊறிய பின்னர் தண்ணீரை சுத்தமாக வடிக்கட்டிக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு கிரைண்டரில் போட்டு நன்கு மெதுவாக அரைக்கவும். அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்.
மாவை அரைத்து எடுத்த பின்னர், தோசை, இட்லிக்கு மாவு சேர்ப்பதை போலவே, அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றை ஒரு இரவு முழுதும் அல்லது சுமார் 12 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடலாம்.
காலையில் பொங்கி வந்திருக்கும் மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை கலந்த கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மாவை ஆப்ப சட்டியில் போட்டு ஆப்பத்தை சுட்டு எடுக்கவும். இந்த சூடான ஆப்பத்துடன் தேங்காய் பால் சேர்த்து ருசித்து மகிழலாம்.