காலை உணவுக்கு ஆப்பம், தேங்காய் பால் என்றால் தேவாமிர்தம்தான், ஆனால், அதற்கு ஆப்பம் மிருதுவாக இருக்க வேண்டும். 2 கப் தேங்காய் துருவல் கொண்டு பஞ்சு போல ஆப்பம் வேணும்னா இதை செய்து பாருங்கள்.
வீட்டிலேயே பஞ்சு போல ஆப்பம் செய்வதற்கு இப்படி இந்த முறையில் செய்து பாருங்கள். முதலில் 2 கப் பச்சரிசி எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி 2-3 முறை நன்றாக கழுவுங்கள், ஒரு தூசிகூட இருக்கக்கூடாது. இப்போது, பச்சரிசியில் தண்ணீர் உற்றி 5 மணி நேரம் ஊறவையுங்கள். அரிசி, தண்ணீர் அளவு எல்லாவற்றுக்கு ஒரே அளவு கப் பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள்.
பச்சரிசி நன்றாக ஊறிய பிறகு, மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்குங்கள்,
அந்த மாவில் இருந்து கால் கப் மாவு எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலக்கிய பின், ஸ்டவ்வில் வைத்து நல்ல அனலில், கலக்கிவிடுங்கள், கொஞ்ச நேரத்திலேயே நன்றாக கெட்டியாகி ஹல்வா பதத்துக்கு வரத் தொடங்கும். அப்படி ஹல்வா ஸ்டேஜ் வரும்போது ஸ்டவ் ஆஃப் செய்து விடுங்கள். அதை அப்படியே எடுத்து ஆற வையுங்கள், ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது இதனுடன், தேங்காயின் பிரவுன் நிற அடிப்பகுதியை நீக்கிவிட்டு, அரிசி எடுத்த அதே கப் அளவில், 2 கப் துருவிய தேங்காயை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், ஆப்பம் நன்றாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனுடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு தண்னீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நாம், இதை ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கிற மாவுகூட சேர்த்து தேவையான அளவு உப்பு, சேர்த்துக் கலக்குங்கள். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள், ஏனென்றால், தோசை மாவு பதத்தைவிட ஆப்பம் மாவு தண்ணீராக இருக்க வேண்டும். நன்றாகக் கலக்கி கலந்துவிட்டபின், ஒரு மூடி போட்டு மூடி வைத்து 10 மணி நேரம் புளிக்க வையுங்கள்.
10 மணி நேரத்துக்குப் பிறகு, மாவு நன்றாகப் புளித்து பொங்கி வந்திருக்கும், இப்போது நாம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆப்பம் செய்ய ஆரம்பிக்கலாம். இதில் நிறைய தண்ணீர் சேர்த்தால், ஆப்பம் கடினமாக இருக்கும். அதனால், அரைத்து புளிக்க வைத்த மாவில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து ஆப்பம் செய்யலாம். மீதி இருக்கிற மாவை 2-3 நாட்கள் ஃபிரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஆப்பத்தை ஆப்பக் கடாயிலும் செய்யலாம், அல்லது நான் ஸ்டிக் கடாயிலும் ஆப்பம் செய்யலாம். ஆப்பம் ஓரங்களில் மொறுமொறு என்றும் நடுவில் சாஃப்ட்டாக இருக்கும். இதனுடன், தேங்காய் பால் அல்லது சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.