/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-175629-2025-09-08-17-56-58.jpg)
வீட்டில் நடக்கும் விசேஷங்கள் அனைத்துக்கும் அவியல் இல்லாமல் விருந்துகள் நிறைவடைவதில்லை. இது கேரளாவின் பாரம்பரிய உணவு என்றாலும் பெரும்பாலான மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். பாரம்பரியா தேங்காயெண்ணெய் கொண்டு பலவித காய்கறிகளில் தயாராகும் அவியல் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
காய்கறிகளில் கேரட், பிரிஞ்சி, முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, கத்தரிக்காய், தேங்காய், தயிர் மற்றும் பிற மசாலா பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஆரோக்கியமான காய்கறிகளை கொண்டு தேங்காயெண்ணெயில் சமைக்கும் இது பார்க்கவே வண்ணமயமாக இருக்கும். இதில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலங்கள் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கலவையை உங்கள் உணவில் சேர்ப்பதன் முலம் உடலில் வைட்டமின் குறைபாடு மற்றும் தாதுகள் குறைபாடு தடுக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 9
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
அவியல் செய்ய
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சேனைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
புடலங்காய் - 1 கப் நறுக்கியது
வாழைக்காய் - 1 கப் நறுக்கியது
வெள்ளை பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
கேரட் - 1 கப் நறுக்கியது
மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
மலபார் வெள்ளரிக்காய் - 1 கப் நறுக்கியது
முருங்கைகாய் - 1 கப் நறுக்கியது
மாங்காய் - 1 கப் நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
அரைத்த தேங்காய் விழுது
அடித்த தயிர் - 1 கப்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், மசாலா விழுதை அரைக்க, மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலையை தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து வைக்க வேண்டும். அதன்பிறகு, அவியல் தயாரிக்க, ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சேனைக்கிழங்கு, புடலங்காய், வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய், பீன்ஸ், கேரட், மஞ்சள் பூசணிக்காய், மலபார் வெள்ளரிக்காய், முருங்கைக்காய் மற்றும் மாங்காய்களை சேர்த்து நன்கு கலந்து வதக்க வேண்டும்.
அதன் பிறகு, மஞ்சள்தூள் மற்றும் உப்பும் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் காய்கறிகள் வெந்து மெல்லியதாகும் வரை வேகவைக்க வேண்டும். பிறகு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து, அதன்பின்னர் அடித்த தயிரையும் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.
இதன் பின், தாளிக்க ஒரு சிறிய கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை வதக்கி, அவியலுடன் கலந்து விட வேண்டும். இதனால், மணமும் சுவையும் உடைய அட்டகாசமான அவியல் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.