காரைக்குடி செட்டிநாடு பகுதியின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான உக்காரை, அதன் தனித்துவமான சுவை மற்றும் மிருதுவான தன்மையால் அனைவரையும் கவரும் ஒரு பலகாரம். 'வாயில் வைத்ததும் கரையும்' என்ற அதன் புகழுக்கு ஏற்ப, இந்த உக்காரையை வீட்டிலேயே எளிதாக எப்படித் தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
இதை பாக்கியலட்சுமி சீரியலில் கூட செய்து காட்டியிருப்பார்கள். அதேபோல நாம் நம் வீட்டிலும் எப்படி செய்யலாம் என்று சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
நெய் - கால் கப் + 5 டேபிள்ஸ்பூன்
ரவை - 1 கப்
வெல்லம் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
முந்திரி
ஏலக்காய்
செய்முறை:
முதலில், ஒரு கப் பாசிப்பயறை லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்னர், அதை குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் கால் கப் நெய் சேர்த்து, அத்துடன் ஒரு கப் ரவையையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வறுக்கவும்.
வறுத்த ரவையுடன், ஏற்கனவே வேகவைத்து வைத்துள்ள பாசிப்பயறைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்தால் போதும், கம்பிப் பதம் வர வேண்டிய அவசியம் இல்லை.
கரைந்த வெல்லப்பாகை வடிகட்டி, ரவை மற்றும் பயறு கலவையுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும். இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக (சுமார் ஐந்து டேபிள்ஸ்பூன்) நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரியையும், ஏலக்காயையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். இப்போது, காரைக்குடி செட்டிநாட்டின் பிரபலமான மற்றும் வாயில் வைத்ததும் கரையும் உக்காரை இனிப்பு தயார்.