பெங்களூரு ஸ்பெஷல் சித்ரன்னா எப்படி செய்வது என்று பார்ப்போம். சித்ரன்னா என்பது நம்மூர் எலுமிச்சை சாதம். இதை எப்படி பேச்சுலர்ஸ்க்கு ஏற்ற மாதிரி எப்படி செய்வது என்று மிஸ்டர் க்ரிஷ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இது காலை உணவாகவோ அல்லது மதிய உணவிற்கோ மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (வடித்து, உதிரியாக ஆற வைத்தது)
சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை அல்லது முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2-3
பச்சை மிளகாய் - 2-3
கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ¼ கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 2-3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருந்தால் பிசுபிசுப்பு தன்மையுடன் ஆகிவிடும் என்பதால், நன்கு ஆற விடுவது முக்கியம். சாதம் வடித்தவுடன் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி, பரப்பி வைத்தால் உதிரியாக இருக்கும். ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் வேர்க்கடலை அல்லது முந்திரி சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
விருப்பப்பட்டால், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்த பிறகு, இந்த தாளித்த கலவையை ஆறிய சாதத்துடன் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாக நன்கு கிளறவும். அனைத்து பக்கமும் மசாலா சேரும்படி மெதுவாக கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சூடாக பரிமாறவும்.
சித்ரன்னா பொதுவாக வெங்காயம் சேர்க்கப்படாமல் செய்யப்படும். ஆனால், சிலர் சுவைக்காக வெங்காயம் சேர்ப்பார்கள். வேர்க்கடலைக்கு பதில் முந்திரி அல்லது இரண்டுமே சேர்க்கலாம். சாதம் கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் சித்ரன்னா பிசுபிசுப்பாக மாறிவிடும். எலுமிச்சை சாற்றை அடுப்பை அணைத்த பிறகு சேர்த்தால், அதன் புளிப்பு சுவை அப்படியே இருக்கும்.