வீடுகளில் என்னதான் பஜ்ஜி செய்தாலும், அது டீக் கடை பஜ்ஜி போல, பார்க்க அழகாகவும் சுவையாகவும் வருவதில்லை. அப்படி டீக் கடைகளில் போடப்படும் பஜ்ஜிகளில் மட்டும் என்ன ஸ்பெஷல், மிளகாய் வத்தலை ஊறவைத்து டீக் கடை பஜ்ஜி மாதிரி வீட்டிலேயே செய்வதற்கு தெரிந்துகொள்வோம்.
டீக் கடைகளில் செய்யப்படும் பஜ்ஜி போல வீட்டிலேயே செய்ய முதலில் வாழைக்காய்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஃபிரஷ்ஷான வாழைக்காய்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது வாழைக்காய் காம்ப்களைக் கட் செய்யும்போது தண்ணீர் வர வேண்டும் அப்போதுதான் அது ஃபிரஷ் வாழைக்காய்.
இந்த ஃபிரஷ்ஷான வாழைக்காயை பஜ்ஜி போடுவதற்கு மிதமான அளவில் சீவி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, பஜ்ஜி மாவு கரைக்க வேண்டும்.
அதற்கு முன், பஜ்ஜியில் சுவையைக் கூட்ட, இதை கவனமாக செய்யுங்கள். முதலில் 10 காய்ந்த மிளகாயை காம்பை நீக்கிவிட்டு ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, 10 பல்லு பூண்டு எடுத்துகொள்ளுங்கள், பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து பஜ்ஜி மாவு கரைக்க வேண்டும். அதற்கு முன்பு, அகலமான மாத்திரமாக இல்லாமல், அகலம் குறைந்த ஆழமான பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் உப்பு எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் சோடா உப்பு கால் டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தூள் சுவையைக் கூட்டும். அடுத்து, அரை டீஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள். சீரகத்தை லேசாக நசுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள், நல்ல வாசமாக இருக்கும். ஓமம் ஒரு சிட்டிகை அளவு எடுத்து லேசாக நசுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி எல்லாவற்றையும் கரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் வத்தல், பூண்டு, பெருஞ்சீரகப் பேஸ்ட் எடுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து இதனுடன் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, இதனுடன் 2 கப் கடலை மாவு சேர்த்துக்கொள்ளுங்கள், பச்சரிசி மாவு கால் கப் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் இருக்கிற தண்ணீரிலேயே கட்டியில்லாமல் நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து பஜ்ஜி போடுவதற்கு பதமாக மாவு கரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, வாழைக்காயை எடுத்து, பஜ்ஜி மாவில் அழுத்தி எடுத்து, எண்ணெய் காயும் வாணலியில் பொரித்து எடுத்தால், சுவையான டீக்கடை பஜ்ஜி தயார். நிச்சயமாக இந்த மாதிரி செய்தால், பஜ்ஜி சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“