வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நன்மை தரக் கூடியது. வாழை இலையில் சாப்பிடலாம். வாழையின் பழத்தை சாப்பிடலாம். வாழைப் பூ, வாழைத் தண்டையும் உணவு சமைத்து சாப்பிடலாம். வாழைத் தண்டுஉடல் எடையைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.
நமது உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் துணை புரிகிறது. அதோடு வாழைத்தண்டில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகி விடும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய நன்மை கொண்ட வாழைத் தண்டில் சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு – 1
பாசிப்பருப்பு – 200 கிராம்
பச்சை மிளகாய் – 5
காய்ந்த மிளகாய் – 2
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – பெரிய துண்டு
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – சிறிது
உளுந்தம்பருப்பு – சிறிது
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
தேங்காய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
வாழைத்தண்டை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். சமைக்கும் வரை மோர் கலந்த நீரில் போட்டால் கறுத்துப் போகாமல் இருக்கும். இப்போது ஒரு அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பருப்பு கொஞ்சும் வெந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
இப்போது வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். அடுத்ததாக மற்றொரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத் தண்டு கலவையில் சேர்க்கவும். அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். இஞ்சி பூண்டு அதிகமாக சேர்த்தால் நல்ல மணமாகவும், ஆரோக்கியத்திற்கு நன்றாக இருக்கும்.