கருப்பு vs வெள்ளை... எந்த உளுந்து உடம்புக்கு பெஸ்ட்: விளக்கும் டாக்டர் மைதிலி
வெள்ளை உளுந்துக்கு மாற்றாக கருப்பு உளுந்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.
பெரும்பாலானோர் வீட்டில் அதிகமாக வெள்ளை உளுந்து தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கருப்பு உளுந்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். பருவமடைந்த காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்தில் செய்த உணவை சாப்பிட கொடுப்பார்கள். இதன் மூலம் பி.சி.ஓ.டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என அவர் கூறுகிறார்.
Advertisment
வெள்ளை உளுந்துக்கு மாற்றாக கருப்பு உளுந்தை அன்றாட உணவில் பயன்படுத்தும் போது இருதயம் ஆரோக்கியமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை சீரமைக்கும் தன்மையும் கருப்பு உளுந்துக்கு இருக்கிறது. இருதயத்தின் இரத்த ஓட்டத்தையும் இது சீராக பராமரிக்கிறது.
கருப்பு உளுந்தில் மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது. இவை இரண்டும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. நரம்பு மண்டலம் மற்றும் தசையை வலுவாக்கும் ஆற்றல் கருப்பு உளுந்துக்கு இருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை கருப்பு உளுந்தில் இருக்கிறது. இவை எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதை குறைக்கிறது. மூல வியாதி இருப்பவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.
Advertisment
Advertisements
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருப்பு உளுந்தை கொடுக்கலாம் என மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். கருப்பு உளுந்து, அன்டி ஏஜிங்காக செயல்படுகிறது. எனவே, இவை நம் சருமத்தை பளபளப்பாக மாற்றுகின்றன. அடிக்கடி கருப்பு உளுந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு தலை முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும்.
கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி அதனை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் தன்மை கருப்பு உளுந்துக்கு இருக்கிறது. ஃபேட்டி லிவர் பாதிப்பை இது தடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம் கருப்பு உளுந்தை கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் இதில் இருக்கிறது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு உளுந்தை, வெள்ளை உளுந்துக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.