சப்போட்டா பழம் மிக எளிதாக கிடைக்கின்ற பழம். பலருக்கும் இந்த பழம் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவர். இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால் எலும்புக்கு வலு சேர்கிறது. சருமத்திற்கு நல்லது. தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் சப்போட்டாவை தினமும் சாப்பிட்டு வர சரியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சப்போட்டா பழம் இயல்பாகவே இனிப்பாக இருக்கும். அந்தவகையில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் சப்போட்டா பழத்தைக் கொண்டு அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சப்போட்டா பழம் – 1/4 கிலோ
முந்திரி -10
நெய் -2 டேபிள் ஸ்பூன்
ரவை – 1/2 கப்
வெல்லம் – 1 கப்
செய்முறை
நன்கு பழுத்த சப்போட்டா பழத்தை எடுத்து தோல் உரித்து கொட்டைகளை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி போட்டு வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின் அதே கடாயில் ரவையை போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
ரவை நன்றாக வறுத்தப்பின் அரை கப் ரவைக்கு ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ரவையை கட்டி படாமல் நன்றாக கலந்து விடுங்கள்.
பின், அதனுடன் அரைத்து வைத்திருக்கும் சப்போட்டா பழ பேஸ்ட்டை சேர்த்து கலக்க வேண்டும். பிறகு வெல்லம், நெய் சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடங்களில் கடாயில் ஒட்டாத அளவிற்கு, ரவை, சப்போட்டா, வெல்லம் எல்லாம் நன்றாக கலந்து சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து விடும். இதன் பின் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டி அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான சப்போட்டா பழ அல்வா ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil