மழைக்காலம் வந்துவிட்டாலே, உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்ளவும், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளில் இருந்து தற்காத்து கொள்ள நம்மில் பலர் தேடுவது ஒரு கப் சூடான ரசத்தைத்தான். ஆனால், சாதாரண ரசத்தையும் தாண்டி, ஆரோக்கியத்தையும் சுவையையும் ஒருங்கே அள்ளித்தரும் பாரம்பரிய அற்புதம் உண்டு என்றால், அது கோழி மிளகு சாறு (Chicken Pepper Rasam)தான். கார்த்திஸ் குக்புக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்ட இந்த ரெசிபி பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இந்த ரசம் வெறும் சுவைக்காக மட்டும் அல்ல; அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் விரும்பப்படுகிறது. நாட்டுக்கோழி எலும்புகளிலிருந்து வெளிப்படும் சத்துக்கள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலாப் பொருட்களுடன் இணையும்போது, ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக் கவசமாக இது செயல்படுகிறது.
சளி, இருமலுக்கு: மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவை சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த வீட்டு வைத்தியங்கள். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செரிமானத்திற்கு உதவும்: சீரகம், சோம்பு ஆகியவை செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகின்றன. காரமான இந்த ரசம், பசியைத் தூண்டி, செரிமானத்திற்கும் துணைபுரியும். கோழி எலும்புகளின் சத்துக்கள் உடலுக்கு வலிமையையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன. காய்ச்சல் அல்லது உடல் சோர்வாக இருக்கும் நேரங்களில் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. கிராமத்துப் பாணியில் தயாரிக்கப்படும் இந்த ரசம், அதன் தனித்துவமான மசாலாப் பொருட்களின் கலவையால் ஒரு பாரம்பரியமான, மனதை மயக்கும் சுவையை அளிக்கிறது.
கோழி மிளகு சாறு தயாரிப்பது கடினமான செயல் அல்ல. சில எளிய படிகளில், உங்கள் வீட்டிலேயே இந்த ஆரோக்கியமான ரசத்தை எளிதாகத் தயாரிக்கலாம். கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து, கோழி எலும்புகளுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைப்பதே இதன் அடிப்படை. நீண்ட நேரம் மிதமான தீயில் கொதிக்க வைக்கும்போது, கோழியின் சத்துக்கள் முழுமையாக ரசத்தில் இறங்கி, அதன் மருத்துவ குணங்களை அதிகரிக்கின்றன.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு ஆங்கில மருந்துகளை நாடாமல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த இயற்கை வைத்தியங்கள், பக்கவிளைவுகள் அற்றவை. கோழி மிளகு சாறு, உடலுக்கு இதமளிப்பதுடன், நாக்கிற்கும் விருந்தளிக்கும் ஒரு அற்புதமான உணவு.